
மும்பை: தூய்மைப்பணியாளர் போட்ட தவறான ஊசியால் 2 வயது குழந்தை பலி
மும்பை: மும்பையின் கோவண்டி பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையில், 2 வயது குழந்தைக்கு தூய்மைப் பணியாளர் தவறான ஊசி செலுத்தியதால், அது பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
வியாழக்கிழமையன்று, கோவண்டியின் பைகன்வாடி பகுதியில் இயங்கி வந்த சிறு மருத்துவமனையில், தூய்மைப் பணியாளர் 2 வயது குழந்தைக்கு தவறான ஊசியை செலுத்தியதால், அது பலியான சம்பவத்தில், மருத்துவமனை மருத்துவர், செவிலியர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
குழந்தைக்கு தவறான ஊசியை செலுத்திய 17 வயதாகும் தூய்மைப் பணியாளர், சிறார் என்பதால் அவர் மீது சிறார் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதையும் படிக்க.. அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம்
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஜனவரி 12ஆம் தேதி இரண்டு வயது ஆண் குழந்தை தஹா கான், காய்ச்சல் கரணமாக நூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று பணியிலிருந்த மருத்துவர், வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன்பு, அங்கிருந்த மற்றொரு மருத்துவப் பணியாளரிடம், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது நபருக்கு அசித்ரமைசின் மருந்தினை ஊசி மூலம் செலுத்துமாறு பேணிக்க தேடியுள்ளார். அப்போது மருத்துவப் பணியாளர் அங்கில்லாததால், அவர் செவிலியரிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சொன்னதை செவிலியர் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அந்த ஊசியை குழந்தைக்கு செலுத்துமாறு தூய்மைப் பணியாளரை கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், அசித்ரமைசின் ஊசியை 16 வயது நோயாளிக்கு பதிலாக, தூய்மைப் பணியாளர் 2 வயது குழந்தைக்கு செலுத்தியுள்ளார்.
தவறான ஊசி குழந்தைக்கு செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.