குடும்பத்தின் கோட்டையில் போட்டி...சவால் விடுக்கும் அகிலேஷ்; பரபரப்பான அரசியல் களம்

முலாயம் சிங், ஐந்து முறை போட்டியிட்டு வென்ற மைன்புரி மக்களவை தொகுதியின் கீழ் கர்வால் சட்டப்பேரவை தொகுதி வருகிறது.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் கர்வால் தொகுதியிலிருந்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதி அமைந்துள்ள மைன்புரி மாவட்டம், முலாயம் சிங்கின் கோட்டையாக பார்க்கப்படுகிறது.

கடந்த 1993ஆம் ஆண்டு முதல், ஒரு முறை தவிர்த்து, மற்ற எல்லா தேர்தல்களிலும் கர்வால் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரே வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக வசம் சென்றது இந்த தொகுதி. தற்போது, இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக சோபரன் யாதவ் உள்ளார்.  

முலாயம் சிங், ஐந்து முறை போட்டியிட்டு வென்ற மைன்புரி மக்களவை தொகுதியின் கீழ் கர்வால் சட்டப்பேரவை தொகுதி வருகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ், வரலாறு காணாத வெற்றியை பெறுவார் என சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த பல நாள்களாகவே, சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. ஆளும் பாஜகவை எதிர்த்து களம் காணும் அகிலேஷ், சிறு சிறு கட்சிகளுடம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

கடந்த நவம்பர் மாதம், தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அகிலேஷ் அறிவித்தார். ஆனால், அனைத்து தரப்பினரிடமும் சேர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அகிலேஷ் போட்டியிடுவது குறித்த அறிவுப்பு வெளியாகும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

பாஜகவின் கோட்டையான கோரக்பூர் தொகுதியிலிருந்து முதல்வர் யோகி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, அகிலேஷ் யாதவுக்கு அழுத்தம் எழுந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com