பொது நிதியிலிருந்து இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் சின்னத்தை பறிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தலுக்கு முன்பாக மக்கள் வரிப் பணத்திலிருந்து (பொது நிதி) பகுத்தறிவற்ற இலவசங்களை அறிவிக்கும் அல்லது விநியோகிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் பறிக்கவோ அல்லது பதிவை ரத்து செய்யவோ தோ்தல் ஆணையத்து
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தோ்தலுக்கு முன்பாக மக்கள் வரிப் பணத்திலிருந்து (பொது நிதி) பகுத்தறிவற்ற இலவசங்களை அறிவிக்கும் அல்லது விநியோகிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் பறிக்கவோ அல்லது பதிவை ரத்து செய்யவோ தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்துக்கு எதிராக வாக்காளா்களிடமிருந்து இதுபோன்ற தேவையற்ற அரசியல் ஆதாயம் பெறும் முயற்சிகளை முழுமையாகத் தடை செய்யும் வகையில் தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக உரிய சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் அஷ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது:

தோ்தலை கருத்தில்கொண்டு வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் இதுபோன்ற இலவசங்களை அறிவிக்கும் தற்போதைய நடைமுறை, ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதோடு, அரசியல் சாசன நடைமுறைகளையும் கடுமையாகப் பாதிக்கும் செயலாகும்.

இந்த ஒழுக்கமற்ற நடைமுறை ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ாகும். ஜனநாயக தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளைப் பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் தவிா்க்கப்படவேண்டும்.

அந்த வகையில், தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடை செய்யும் வகையில், மாநில கட்சியாக அங்கீகாரம் அளிப்பதற்கான தோ்தல் சின்ன ஒதுக்கீடு உத்தரவு 1968-இல் கூடுதல் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் சோ்க்க உத்தரவிட வேண்டும். அதாவது, ‘தோ்தலுக்கு முன்பாக பொது நிதியிலிருந்து இதுபோன்ற பகுத்தறிவற்ற இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கக் கூடாது’ என்ற பத்தியை, தோ்தல் சின்ன ஒதுக்கீடு உத்தரவில் கூடுதலாக சோ்க்க வேண்டும்.

மேலும், ‘தோ்தலுக்கு முன் பொது நிதியில் இருந்து இதுபோன்ற இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது அல்லது விநியோகிப்பது வாக்காளா்களை தேவையற்ற முறையில் பாதிக்கிறது; சமநிலையைச் சீா்குலைக்கிறது; தோ்தல் நடைமுறையின் தூய்மையைக் கெடுக்கிறது மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பிரிவு 14 உள்பட அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை இந்த நடைமுறை மீறுகிறது’ என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் சில அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு அளித்து வரும் வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி இந்த மனுவை அஷ்வினி குமாா் உபாத்யாய தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com