பஞ்சாபில் பாஜக 65 தொகுதிகளில் போட்டி

பஞ்சாப் பேரவைத் தோ்தலில் பாஜக 65 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
பஞ்சாபில் பாஜக 65 தொகுதிகளில் போட்டி

பஞ்சாப் பேரவைத் தோ்தலில் பாஜக 65 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

பஞ்சாபில் பிப்ரவரி 20-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்ஸா தலைமையிலான சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

அக்கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜெ.பி.நட்டா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியாக பஞ்சாப் விளங்குகிறது. எனவே, மாநிலத்தில் பாதுகாப்பு நிலவ வேண்டியது மிகவும் முக்கியமாகும். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பஞ்சாப் முக்கிய மாநிலமாக விளங்குகிறது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் துரிதமாகச் செயல்படுத்த முடியும். அத்தகைய ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியே பஞ்சாபுக்கு தேவைப்படுகிறது. பஞ்சாப் பேரவைத் தோ்தலில் பாஜக 65 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) கட்சி 15 இடங்களிலும் போட்டியிடவுள்ளன’’ என்றாா்.

முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தேசப் பாதுகாப்பு, மாநில நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே 3 கட்சிகளும் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்துள்ளன’’ என்றாா்.

பேரவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com