வாக்களிப்பதை கட்டாயமாக்க 86% இந்தியர்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்

12ஆவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று 86 சதவீத இந்தியர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

12ஆவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று 86 சதவீத இந்தியர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது.
 தேர்தல் ஆணையம் கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி நிறுவப்பட்டது. கடந்த 2011 முதல் இந்த நாள் தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. புதிய மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய இது ஊக்கமளிக்கிறது.
 இந்நிலையில், நாடு முழுவதும் நான்கு லட்சம் பேரிடம் பப்ளிக் ஆப் என்ற சமூக வலைதளம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி நாட்டின் தற்போதைய வாக்குப்பதிவு முறை மீது 80 சதவீதம் பேர் நம்பிக்கையை தெரிவித்தனர்.
 "வாக்களிப்பது எனன்ற கடமையானது சமூக வளர்ச்சிக்கு இந்தியக் குடிமக்களின் முக்கியமான பங்களிப்பாகும். வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டுமா என்ற கேளவிக்கு 86 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்தனர்' என்று இந்த ஆய்வு கூறுகிறது.
 உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர் 30 வயதுக்கும் கீழ் உள்ளவர்களாவர். எதை அடிப்படையாக வைத்து வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு களத்தில் உள்ள வேட்பாளர் கடந்த முறை எவ்வாறு செயல்பட்டார் என்பதை அடிப்படையாக வைத்து வாக்களிப்போம் என்று 34 சதவீதம் பேர் பதிலளித்தனர்.
 அனைத்து வேட்பாளர்களையும் விரிவாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் வாக்களிப்போம் என்று 31 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
 ஒட்டுமொத்த செல்வாக்கை வைத்து வாக்களிப்பதாக 4.96 சதவீதம் பேரும் வேட்பாளர்களின் அரசியல் கட்சியை வைத்து வாக்களிப்பதாக 11.92 பேரும் தெரிவித்தனர்.
 மக்கள் வாக்களிக்கத் தவறுவது ஏன் என்பது குறித்து இந்த ஆய்வில் கேட்கப்பட்டது. அதற்கு வாக்குப்பதிவின்போது உள்ளூரில் இல்லாமல் மற்றொரு நகரில் இருப்பதுதான் முக்கிய காரணம் என்று 30.04 சதவீதம் பேர் தெரிவித்தனர். எனினும் 56.3 சதவீதம் பேர் தாங்கள் வாக்களிக்கத் தவறியதே இல்லை என்று குறிப்பிட்டனர்.
 கடந்த காலங்களில் வாக்களிக்காமல் இருந்ததற்கு தேர்தல் குறித்த தகவல் இல்லாதது (5.22 சதவீதம்), எந்தக் கட்சியையும் ஆதரிக்காதது (7.19), அக்கறை செலுத்தாதது (1.27) போன்ற காரணங்களையும் ஆய்வில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
 இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 79.5 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது வாக்களித்திருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com