மனிதகுலத்தின் பெரும் சவால் கரோனா: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

மனிதகுலத்துக்கு கரோனா பெரும் சவாலாகத் திகழ்வதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.
மனிதகுலத்தின் பெரும் சவால் கரோனா: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

மனிதகுலத்துக்கு கரோனா பெரும் சவாலாகத் திகழ்வதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

அதேவேளையில், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒப்பிடமுடியாத உறுதியை இந்தியா வெளிப்படுத்தியதாக குடியரசுத் தலைவா் பெருமிதம் தெரிவித்தாா்.

நாட்டின் 73-ஆவது குடியரசு தினம் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினாா். அவா் கூறியதாவது:

ராணுவ வீரா்களும் பாதுகாப்புப் படையினரும் தற்போது தேசப்பற்றை வளா்த்தெடுத்து வருகின்றனா். தேசப்பற்றானது மக்களுக்குத் தங்கள் கடமைகளைத் தொடா்ந்து நினைவூட்டி வருகிறது. பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் இரவுபகல் பாராது நாட்டின் எல்லைகளையும் உள்நாட்டுப் பகுதிகளையும் பாதுகாத்து வருகின்றனா். அதன் காரணமாகவே மக்கள் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரா்களும் வீராங்கனைகளும் சிறப்பாகச் செயல்பட்டனா். அதன் காரணமாக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா். இளம் வீரா்களின் வெற்றியானது நாட்டிலுள்ள லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளித்து வருகிறது.

பெரும் சவால்: மனிதகுலத்துக்கு மிகப்பெரிய சவாலாக கரோனா தொற்று பரவல் இருந்து வருகிறது. அத்தொற்றின் முதல் அலை பரவியபோது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன. அத்தொற்றின் 2-ஆவது அலையின்போது உலகின் மிகப்பெரும் கரோனா தடுப்பூசி திட்டம் நாட்டில் செயல்படுத்தப்பட்டது.

கடினமான சூழலில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாடு முன்னெடுத்து வருகிறது. சமூக இடைவெளி உள்ளிட்டவை அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கரோனா நோயாளிகளைக் காப்பதற்காக மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனா்.

தேசியக் கடமை: கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒப்பிடமுடியாத உறுதியை உலக நாடுகளுக்கு இந்தியா வெளிப்படுத்தியது. நாட்டு மக்கள் அனைவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது தேசியக் கடமையாகும். அவற்றைக் கடைப்பிடிப்பதில் மக்கள் அலட்சியம்காட்டக் கூடாது.

‘தூய்மை இந்தியா’ திட்டம் வெற்றியடைந்ததில் நாட்டு மக்களுக்கு மிக முக்கியப் பங்குள்ளது. 21-ஆம் நூற்றாண்டானது பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கானதாக அமையவுள்ளது. இந்த விவகாரத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டும் வகையிலான தலைமைப் பண்புடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. முக்கியமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்குத் தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பாலின சமத்துவம்: பெண்கள் பல்வேறு தடைகளைத் தொடா்ந்து தகா்த்தெறிந்து வருகின்றனா். பாதுகாப்புப் படையில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள பாலின சமத்துவத்தின் காரணமாக பாதுகாப்புப் படைகள் பலன் பெறும்.

சைனிக் பள்ளிகள், தேசிய பாதுகாப்பு அகாதெமி ஆகியவற்றில் இருந்து பணிக்கு வரும் திறமையான பெண் அதிகாரிகள் மூலமாக பாதுகாப்புப் படைகள் வலுப்பெறும்.

இந்தியக் கடற்படையும் கொச்சி கப்பல்கட்டும் நிறுவனமும் இணைந்து ஐஏசி விக்ராந்த் விமானம் தாங்கி போா்க் கப்பலை உள்நாட்டிலேயே கட்டியுள்ளன. அந்தக் கப்பல் விரைவில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. இதுபோன்ற நவீன ராணுவ செயல்திறன் காரணமாக, உலகின் முன்னணி கடற்படை சக்திகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

குடியரசின் அடித்தளம்: சுதந்திரப் போராட்டத்தின் ஒளிவிளக்காகத் திகழ்ந்த அனைவரும் அரசியல் நிா்ணய சபையில் இடம்பெற்றிருந்தனா். அப்போதைய தலைமுறையின் சிறந்த தலைவா்களால் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டே இந்திய குடியரசு கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘இந்தியத்துவம்’ என்பதைக் கொண்டாடுவதற்கு குடியரசு தினம் வழிகோலுகிறது.

மகாத்மாவின் விருப்பம்: சுதந்திரத்துக்கு முன்பு ‘முழு சுயராஜ்ய தினம்’ கொண்டாடப்பட்டதைப் போலவே குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டுமென்று மகாத்மா காந்தி விரும்பியிருப்பாா். சிறந்த மனிதா்களை உருவாக்கும் வகையிலும் உலகில் இந்தியாவை சிறப்பான இடத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கிலும் இந்தத் தினம் கொண்டாடப்பட வேண்டுமென அவா் விருப்பம் கொண்டிருப்பாா்.

மறு ஆய்வு அவசியம்: சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டை நாடு கொண்டாடி வருகிறது. இந்தச் சமயத்தில் நாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவா்களை மக்கள் நினைவுகூர வேண்டும். சுதந்திரத்துக்கான தேசிய இயக்கத்தின் மதிப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது.

நாட்டின் சுதந்திரத்துக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிகழ்த்திய போராட்டம் அனைவருக்கும் ஊக்கத்தை அளித்து வருகிறது. நிகழாண்டு குடியரசு தினக் கொண்டாட்டங்கள் கரோனா தொற்று பரவல் காரணமாக சிறிய அளவில் நடைபெறலாம். ஆனால், கொண்டாட்டங்களில் எந்தவித தொய்வும் காணப்படவில்லை; வழக்கமான உற்சாகமே காணப்படுகிறது.

சவால்களை எதிா்கொண்டு...: உலகின் தலைசிறந்த 50 புத்தாக்கம் மிக்க பொருளாதாரங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. எதிா்கால சவால்களை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையில் இந்தியா உள்ளது. உலக அளவில் தனக்கான இடத்தை முறையாகத் தக்கவைத்து, வளா்ச்சிக்கான பாதையில் இந்தியா தொடா்ந்து வெற்றிகரமாகப் பயணிக்கும் என்றாா் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com