தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மேலிடம்

பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாகத்தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தூய இருதய மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

இவர் தங்கியிருந்த விடுதியில் காப்பாளர், அறைகளை சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக லாவண்யா தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் விடுதியின் காப்பாளர் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாகத்தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. 

கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இருப்பினும், மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்த கொண்டது கவலையும் வருத்தமும் அளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட  குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். 

அவர்கள் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தி, அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச எம்பி சந்தியா ராய், தெலங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சித்ரா தாய் வாக், கர்நாடகத்தை சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com