பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைகிறார்களா? சூடுபிடித்த கர்நாடக அரசியல்

பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக, கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியிருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர், பாஜகவில் இணைந்த நிலையில் அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இச்சூழலில், 10 க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைய தயாராக இருப்பதாக கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவும் கட்சியின் தலைவர் டி. கே. சிவகுமாரும் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது. 

இருப்பினும், இவரது கூற்றை காங்கிரஸிருந்து பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள் மறுத்துள்ளனர். கர்நாடக அமைச்சர்களான முனிரத்ன நாயுடு, கே. சுதாகர், எஸ். டி. சோமசேகர் ஆகியோர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து விரிவாக பேசிய முனிரத்னா, "நானும் எனது நண்பர்களும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல மாட்டோம். அப்படி நாங்கள் செல்லும் பட்சத்தில், சித்தராமைய்யா அங்கு இருக்க மாட்டார்" என்றார்.

முன்னதாக, பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக, கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாஜக மேலிடம் அனுமதி அளித்தால், அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைவார்கள் எனக் கூறினார்.

காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள கே.சுதாகர், முதலில் தங்களுடன் இணையவுள்ள பாஜக எம்எல்ஏக்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட வேண்டும் என்றும் 2023 தேர்தலை கருத்தில்கொண்டு, காங்கிரஸ் விளம்பரத்திற்காக இப்படி அறிக்கையை விடுகிறார்கள் என்றார்.

சித்தராமையாவின் கூற்றை நிராகரித்த அமைச்சர் எஸ்.டி. சோமசேகர், "காங்கிரஸ் தலைவர்களுக்கு வேறு வேலை இல்லை. வெறுமனே ஊகங்களில் பணியாற்றுகிறார்கள். ஆனால் பாஜகவில் எங்களுக்கு வேலை இருக்கிறது. மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்ட செல்ல பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளவர்களின் விவரங்களை முதலில் வெளியிடுங்கள் என்றார்.

இதுகுறித்து பேசிய சித்தராமையா, "காங்கிரஸில் சேர விரும்பும் மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் தலைமை மற்றும் சித்தாந்தத்தை ஏற்க வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால், நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்கள் பெயர்களை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை" என தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com