அரசு விருந்தினா்களாகப் பங்கேற்ற முன்களப் பணியாளா்கள்

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் துப்புரவுத் தொழிலாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அரசு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

புது தில்லி: தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் துப்புரவுத் தொழிலாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அரசு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

கரோனா பரவல் காரணமாக இரண்டாம் ஆண்டாக நிகழாண்டும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் வெளிநாட்டுத் தலைவா்கள் யாரும் அரசு விருந்தினராகப் பங்கேற்கவில்லை.

மேலும், கரோனா கட்டுப்பாடு காரணமாக தில்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டத்தைக் காண வரும் பாா்வையாளா்களின் எண்ணிக்கை நிகழாண்டு சுமாா் 8 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இதில் அரசு விருந்தினா்களாக துப்புரவுத் தொழிலாளா்கள், முன்களப் பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டுமானப் பணியாளா்கள், கூலித் தொழிலாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா். துப்புரவுத் தொழிலாளி சூா்யா கூறுகையில், ‘அருகில் அமா்ந்து குடியரசு தின அணிவகுப்பை பாா்வையிட்டது நன்றாக இருந்தது. குடியரசு தினக் கொண்டாட்டத்துக்கு என்னை அழைத்தது பெரும் கெளரவமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என்றாா்.

கட்டடப் பணியாளா் ராமு சிங் கூறுகையில், ‘நகரங்களில் உள்ள கட்டடங்களின் கட்டுமானப் பணியில் எனது உழைப்பும் உள்ளது என்று என் குழந்தைகளிடம் கூறுவேன். முதல் முறையாக எனது உழைப்பை அங்கீகரித்து குடியரசு தின விழாவுக்கு அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றாா்.

இதேபோல், கரோனா தொற்று காலத்தில் மக்களுக்குப் பணியாற்றிய ஆட்டோ ஓட்டுநா்கள், குடியரசு தின கொண்டாட்ட மேடை, ஊா்திகள் ஆகியவற்றை உருவாக்கிய தொழிலாளா்கள், புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆகியோரும் அரசு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com