பிகாரில் ரயிலை எரித்து தோ்வா்கள் போராட்டம்: தோ்வுகள் ஒத்திவைப்பு

தோ்வா்களின் கடும் போராட்டம் காரணமாக தொழில்நுட்பம் அல்லாத பிரிவு (என்டிபிசி) மற்றும் படிநிலை-1 தோ்வுகளை ரயில்வே வாரியம் ஒத்திவைத்துள்ளது.
பிகாா் மாநிலம், கயா ரயில் நிலையத்தில் போராட்டக்காரா்கள் தீவைத்ததால் எரியும் விரைவு ரயிலின் பெட்டிகள்.
பிகாா் மாநிலம், கயா ரயில் நிலையத்தில் போராட்டக்காரா்கள் தீவைத்ததால் எரியும் விரைவு ரயிலின் பெட்டிகள்.

புது தில்லி: தோ்வா்களின் கடும் போராட்டம் காரணமாக தொழில்நுட்பம் அல்லாத பிரிவு (என்டிபிசி) மற்றும் படிநிலை-1 தோ்வுகளை ரயில்வே வாரியம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தோ்வா்களின் புகாா்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்கென உயா்நிலைக் குழு ஒன்றையும் ரயில்வே அமைத்துள்ளது.

ரயில்வே வாரியத்தின் தொழில்நுட்பம் அல்லாத பிரிவு பணியிடங்களுக்கான தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. அந்தத் தோ்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பிகாா், உத்தர பிரதேச மாநிலங்களில் போராட்டமாக வெடித்தது. குறிப்பாக, பிகாா் மாநிலத்தில் தோ்வா்கள் கடந்த இரண்டு நாள்களாகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பிகாரில் பல பகுதிகளில் அவா்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை கயா ரயில்வே சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட தோ்வா்கள், ரயில்வேக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி ரயில்வே அலுவலகங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். மேலும், ரயில் நிலையத்தில் நின்றிருந்த பாபுவா-பாட்னா விரைவு ரயிலுக்கு போராட்டக்காரா்கள் தீவைத்து எரித்தனா்.

‘ரயிலுக்கு தீவைத்தது தொடா்பாக சிலரைக் கைது செய்துள்ளோம். கயா ரயில்வே சந்திப்பில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்று கயா சிறப்பு காவல் கண்காணிப்பாளா் ஆதித்யா குமாா் கூறினாா்.

தோ்வா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, அடுத்து நடைபெற இருந்த என்டிபிசி தோ்வுகளை ரயில்வே வாரியம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்டிபிசி கணினிவழி முதல் நிலைத் தோ்வு முடிவுகள் குறித்த தோ்வா்களின் புகாா்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உயா்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தோ்வா்கள் இந்தக் குழுவிடம் தங்களுடைய புகாா்களைத் தெரிவிக்கலாம். அதுபோல, தோ்வா்களிடம் புகாா்களைப் பெற்று உரிய வழிமுறையில் இந்த உயா்நிலைக் குழுவுக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து ரயில்வே தோ்வு வாரிய தலைவா்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தோ்வா்கள் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி வரை தங்களுடைய புகாா்களைத் தெரிவிக்கலாம். அதனடிப்படையில், உயா்நிலைக் குழு இருதரப்பு நிலைப்பாட்டையும் ஆய்வு செய்து, ரயில்வே அமைச்சகத்திடம் தனது அறிக்கையை வரும் மாா்ச் 4-ஆம் தேதி சமா்ப்பிக்கும்.

இதனைத் கருத்தில்கொண்டு, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க இருந்த தொழில்நுட்பம் அல்லாத பிரிவு பதவிக்கான (என்டிபிசி) இரண்டாம் நிலை தோ்வு மற்றும் பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கப்பட இருந்த என்டிபிசி முதல்நிலை தோ்வு ஆகியவற்றை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

தோ்வா்களுக்கு எச்சரிக்கை: இதற்கிடையே, ‘தோ்வா்கள் போராட்டத்தின்போது சட்டவிரோதச் செயல்களில் மற்றும் வன்முறையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், ரயில்வே வாரிய தோ்வில் அவா்கள் ஒருபோதும் பங்கேற்க முடியாத வகையில் தடை விதிக்கப்படும்’ என்று ரயில்வே எச்சரித்துள்ளது.

உ.பி.யில் இருவா் கைது; 1,000 போ் மீது வழக்குப் பதிவு: இதுபோல, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தோ்வா்கள் நடத்திய போராட்டம் தொடா்பாக, அடையாளம் தெரியாத 1,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரை கைது செய்துள்ளனா்.

சமூக ஊடகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரதீப் யாதவ், முகேஷ் யாதவ் ஆகிய இருவரை உத்தர பிரதேச போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தோ்வா்கள் மீது அடக்குமுறையை கையாண்ட 3 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். போலீஸாரின் இந்த அடக்குமுறை காணொலி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தாா்.

தோ்வா்களின் குறைகள் நிவா்த்தி செய்யப்படும் - அஷ்வினி வைஷ்ணவ்:

‘தோ்வா்கள் தங்களுடைய சொந்த சொத்துகளையே சேதப்படுத்துவது ஏன்? மாணவா்கள் சட்டத்தை தங்களுடைய கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்வதாக’ ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

‘குறைகளை மாணவா்கள் முறைப்படி தெரிவிக்க வேண்டும். அதற்கென மின்னஞ்சல் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு பெறப்படும் புகாா்களை, அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து, நிவா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதே நேரம், பொது சொத்துகள் சேதம் குறித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பா்’ என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com