ஏர் இந்தியா பயணிகளுக்கான புதிய அறிவிப்பு

கிட்டத்தட்ட 69 ஆண்டுகளுக்கு பிறகு,டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமையன்று செல்லும் பயணிகளுக்கு டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா ஒப்படைக்கப்பட்டப்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு விமானிகள் வழிகாட்டுதல்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடுவார்கள். அப்போது, இதுகுறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான உத்தரவில், வெள்ளிக்கிழமையன்று புறப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் அனைவரும் ஏறிய பின், கதவுகள் மூடப்பட்டதும் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என  விமானிகளைச் செயல்பாட்டுத் துறை கேட்டு கொண்டுள்ளது.

"அன்பான விருந்தினர்களே, இது உங்கள் கேப்டன் (பெயர்) பேசுகிறேன்........ இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விமானத்தில் உங்களை வரவேற்கிறோம், இது ஒரு சிறப்பு நிகழ்வைக் குறிக்கிறது. ஏர் இந்தியா எழுபது  ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்தின் ஓர் அங்கமாகிறது. 

ஒவ்வொரு ஏர் இந்தியா விமானத்திலும் புதிய அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துடன் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்தப் பயணத்தில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நன்றி" என விமானிகள் குறிப்பிடுவார்கள்.

கிட்டத்தட்ட 69 ஆண்டுகளுக்கு பிறகு, டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 18,000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை விற்க விருப்பம் தெரிவிக்கும் கடிதம் டாடா குழுமத்திற்கு அரசின் சார்பில் அனுப்பப்பட்டது. 

பின்னர், பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டது. ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா சாட்ஸ் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளும் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

முன்னதாக, நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க 12,906 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கின் கூட்டு நிறுவனம் இதை 15,100 கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்தது.

2003-04க்கு பிறகான காலகட்டத்தில் நடைபெறும் முதல் தனியார்மயமாக்கலாக இது இருக்கும். அதேவேளையில், ஏர் இந்தியா, டாடாஸ் நிறுவனத்தில் மூன்றாவது ஏர்லைன் பிராண்டாக இருக்கும். ஏற்கெனவே, ஏர் ஆசியா இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் டாடா வசமே  உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com