Enable Javscript for better performance
கனடா எல்லையில் 4 பேரின் உயிரை பலி வாங்கியது கடுங்குளிரா? வெளிநாட்டுக் கனவா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கனடா எல்லையில் 4 பேரின் உயிரை பலி வாங்கியது கடுங்குளிரா? வெளிநாட்டுக் கனவா?

    By ENS  |   Published On : 29th January 2022 12:44 PM  |   Last Updated : 29th January 2022 02:32 PM  |  அ+அ அ-  |  

    PTI01_28_2022_000007B

    கனடா எல்லையில் 4 பேரின் உயிரை பலி வாங்கியது கடுங்குளிரா? வெளிநாட்டுக் கனவா?


    திங்குச்சா.. குஜராத்தின் ஒரு மூலையிலிருக்கும் இந்தக் கிராமத்தைப் பற்றி இதுவரை பலரும் அறிந்திருக்க முடியாது. ஆனால், கனடா - அமெரிக்கா எல்லையில் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கடுங்குளிரில் உறைந்து பலியான சம்பவத்தால் இந்தக் கிராமம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பெரியளவில் வேலை வாய்ப்புகள் இல்லாத திங்குச்சா கிராமத்தில் எப்படியோ ஒரு வெளிநாட்டு வாழ்க்கை எனும் விதை விதைக்கப்பட்டுவிட்டது. அது இன்று வேரூன்றி, ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. 

    அமெரிக்காவுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டால், அங்கு ஏதோ ஒரு பணி வாய்ப்பைப் பெற்று நல்ல ஊதியத்தை ஈட்டலாம் என்பதை, அங்குப் பிறந்த பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போதே அவர்களது காதில் பெயருடன் சேர்த்து இந்தக் கனவையும் சொல்லிவிடுவார்கள் போல...

    அந்த அளவுக்கு அங்கு வாழும் ஒவ்வொரு சிறுசுகள் முதல் இளசுகள் வரை பலருக்கும் எப்படியாவது வெளிநாடு சென்று குடியேறிவிட வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியமாக உள்ளது. அதனை எந்த வகையிலாவது அடைந்துவிட வேண்டும் என்பது ஒன்றே குறிக்கோள் என்பதால், சட்டவிரோதமாக செல்வதோ, உயிரைப் பணயம் வைப்பதோ அவர்களுக்குப் பெரிதாகப்படுவதில்லை.

    அமெரிக்காவுக்கு நேரடியாகப் பயணம் செய்வதில் பல்வேறு சட்டச்சிக்கல்கள் இருப்பதால், அதன் அண்டை நாடுகளுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டு, அங்கிருந்து தரைவழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்துவிடுவதும் ஒரு முக்கிய வழியாக உள்ளது.

    அந்த ஒரு குட்டிக்கிராமத்திலிருந்து ஏராளமானோர் பல வழிகளில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு வேலை செய்து கொண்டே, தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கும் நிதியுதவி செய்கிறார்கள். திங்குச்சா கிராமத்தின் பள்ளி, கோயில், மருத்துவமனை என பல கட்டடங்கள் இப்படி உருவாக்கப்பட்டவையே. இப்படி இடத்துக்குச் சென்றாலும், அது வெளிநாட்டுப் பணம் என்பதை நினைவூட்டினால்.. அந்தக் கிராம மக்களின் மனநிலை எப்படியிருக்கும்?

    இதனைப் பார்த்து வளரும் பிள்ளைகளுக்கு இயற்கையாகவே வெளிநாட்டுக் கனவு உருவாவதில் எந்த அதிசயமும் இல்லையே. கிராமத்தில இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருப்பதுபோல, எந்த வழி கிடைத்தாலும் உடனே கிளம்பி வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்றுதான் அந்தக் கிராம மக்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாட்டுக் கனவுடன்.

    எப்படி இருக்கும் திங்குச்சா?
    திங்குச்சா.. கிராமம் என்று வரைபடம் கூறினாலும், அந்த கிராமத்துக்குள் நுழைந்ததும், நகரத்தின் அனைத்து அம்சங்களும் பொருந்தியிருப்பதைக் காணலாம். இதில் விசேஷம் என்னவென்றால், அங்குள்ள பஞ்சாயத்து கட்டடத்தில் வரையப்பட்டிருக்கும் சுவரோவியம்தான். அமெரிக்க, கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஐஇஎல்டிஎஸ் தேர்வு எழுதியோ அல்லது எழுதாமலோ சேர்க்கைப் பெற்றுத் தரப்படும் என்ற விளம்பரம்தான். (இந்த நாடுகளில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கைப் பெற ஆங்கில அறிவுத் திறன் தேர்வு கட்டாயம்.) ஆனால் அதை எழுதாமலேயே அழைத்துச் செல்வதாக விளம்பரமே செய்யப்படுகிறது என்றால் பாருங்கள்.

    அகமதாபாத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலிருக்கும் இந்த கிராமத்தினரின் வெளிநாட்டுக் கனவை எப்படி பல சட்டவிரோத நிறுவனங்கள் அறுவடை செய்கின்றன என்பதை இந்த விளம்பரத்திலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

    இங்கிருக்கும் 60 வயது நபர் ஒருவர் கூறுகையில், நானே அமெரிக்காவில் அகதியாகக் குடியேறி 33 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். ஆண்டுக்கு ஒரு சில மாதங்கள் இங்கு வந்து வசிப்பேன். அது என்ன திங்குச்சா மட்டுமா? இல்லை, ஒட்டுமொத்த குஜராத் கிராம மக்களுமே அப்படித்தான். இங்கு அவர்கள் படித்த படிப்புக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. எனவே எல்லோருமே வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். தனது மகனுடன் சேர்ந்து அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் முதியவர், மூன்று மகள்களையும், அமெரிக்காவிலேயே திருமணமும் செய்து கொடுத்துள்ளார்.

    இந்தக் கிராமத்திலிருந்து ஏற்கனவே வெளிநாடு சென்று அங்கு வெளிநாடு வாழ் இந்தியராக வாழ்ந்து வரும் நபர்கள், இங்கிருக்கும் தங்களது உறவினர்கள், நண்பர்கள், வெளிநாடு வர உதவுகிறார்கள். பல லட்சம் செலவு செய்து அவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள செலவிடுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

    இந்த நிலையில்தான். அவர்களது தலையில் இடிபோல ஒரு செய்தி வந்திறங்கியது.  கனடா - அமெரிக்கா எல்லையில் கடுங்குளிரில் உறைந்து பலியான குடும்பத்தைப் பற்றி அந்த கிராம மக்கள் கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    ஜெகதீஷ் பட்டேலின் பூர்வீகம் திங்குச்சா. அவரது பெற்றோர் இங்குதான் வசித்து வருகிறார்கள். திருமணம் முடிந்து கலோல் பகுதியில் வசித்து வந்தார், கரோனா பொதுமுடக்கத்தால் மீண்டும் கிராமத்துக்கே வந்திருந்தார். இந்த நிலையில்தான் சுற்றுலா விசாவில் சமீப நாள்களுக்கு முன்பு கனடா சென்றார். அவர்கள்தான் எல்லையில் உயிரிழந்த நபர்கள் என்பதை ஏற்க கிராம மக்கள் மறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும்போது உடல் உறைந்து பலியானதை கனடா அரசு நேற்று உறுதி செய்து, அவர்களது குடும்பத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஜகதீஷ் பட்டேல் குடும்பத்தினர் ஜனவரி 12ஆம் தேதி கனடாவுக்கு விமானம் மூலம் டோரண்டோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர். அங்கிருந்து மானிடோபா சென்றுள்ளனர். பிறகு, ஜனவரி 18ஆம் தேதி எமர்சென் சென்றிருக்கிறார்கள். அடுத்த நாள் இரவு, அவர்களது உடல்கள் கனடா - அமெரிக்கா எல்லையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து ஜகதீஷ் பட்டேலின் நெருங்கிய உறவினர்களுக்கு கனடாவிலிருந்து உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்து தங்குச்சாவிலிருக்கும் உறவினர்கள் கூறுகையில், கனடா எல்லைக்கு அருகே பலியானவர்கள் ஜெகதீஷ் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் என்பது உறுதியாகியுள்ளது. எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம் நன்கு கலந்தாலோசனை செய்த பிறகு, நால்வரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டாம், கனடாவிலேயே இறுதிச் சடங்குகளை செய்துவிடலாம் என்று முடிவெடுத்து கூறிவிட்டோம் என்கிறார்கள் கலங்கிய கண்களுடன்.

    தங்குச்சா கிராமத்தில் வாழ்வோர் வெளிநாட்டுக் கனவுடன் இருப்பது  தவறல்ல. ஆனால், அதனை தவறான வழியில் அடைய முயல்வதே தவறு. ஜெகதீஷ் பட்டேலின் வெளிநாட்டுக் கனவை சட்டவிரோதமாக நிறைவேற்ற முயன்றதால்,  அவர்களது வெளிநாட்டு வாழ்க்கை கானல் நீராக மாறி, இன்று அவர்களது இறுதிச் சடங்குதான் வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. வெளிநாட்டுக் கனவுடன் சென்ற ஒரு குடும்பத்தையே கடுங்குளிர் காவு வாங்கியது நினைத்து கிராமத்தினர் கண்ணீர் கடலில் தவிக்கிறார்கள்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp