
கர்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை நேரில் சந்தித்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் முதல் மகள் பத்மாவதியின் மகள் சௌந்தா்யா (30). மருத்துவரான இவருக்கும், டாக்டா் நீரஜுக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் 6 மாத குழந்தை உள்ளது. பெங்களூரு, வசந்த் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவா் நீரஜுடன், சௌந்தா்யா வசித்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கணவா் நீரஜ் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றதும், சௌந்தா்யா தனது அறையில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டுப் பணியாளா்கள், கதவைத் திறக்க முயன்றபோது உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த பணியாளா்கள், அவரது கணவருக்குத் தகவல் அளித்துள்ளனா்.
இதையும் படிக்க- தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்: ஸ்டாலின் வாழ்த்து
தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த நீரஜ், சௌந்தா்யா இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றாா். அங்கு மின் விசிறியில் செளந்தா்யா தூக்கிட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அவரை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மல்லிகே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து விட்டனா்.
தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிகழ்வு முன்னாள் முதல்வா் எடியூரப்பா குடும்பத்தினருக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கர்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை நேரில் சந்தித்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடன் இருந்தார்.