
இந்த ஆண்டு அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி கிடையாதா?
புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளில் முக்கிய நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக, அல்வா தயாரிக்கும் பணி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துவிட்டது.
மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிகழ்ச்சியில், பாரம்பரியமாக அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியானது, கரோனா பேரிடர் காரணமாக இந்த ஆண்டு முதல் முறையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதைக் குறிக்கும் வகையில், இனிப்பு தயாரிக்கப்பட்டு, பட்ஜெட் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஊழியர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், கரோனா பேரிடர் காலத்தில், அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே, காகிதமில்லாத பொது பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
வழக்கமாக, அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி, நிதியமைச்சகத்தின் தலைமையகக் கட்டடம் அமைந்துள்ள நார்த் பிளாக்கின் கீழ்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். நமது பாரம்பரிய கடாயில், அல்வாவை மத்திய நிதியமைச்சர் மற்றும் இணை அமைச்சர் இணைந்து தயாரிப்பார்கள். அது பிறகு பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு பரிமாறப்படும்.
அன்று முதல், பட்ஜெட் பற்றிய தகவல்கள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால், ஊழியர்கள் அனைவரும் நிதியமைச்சகத்திலேயே அங்கேயே தங்கி பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்பதை குறிக்கும் விதமாகவும் அந்த நாள் அமையும்.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான், பட்ஜெட் தாக்கல் செய்த ஊழியர்கள், தங்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.