
கோப்புப்படம்
உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வா்கள் இருவரின் மகள்களும், முந்தைய தோ்தலில் அவா்களுடைய தந்தையா் போட்டியிட்டு தோல்வியுற்ற தொகுதிகளிலேயே பழி தீா்க்கும் விதமாக வரும் தோ்தலில் போட்டியிட இருப்பது அந்த மாநிலத்தில் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.
இந்த தோ்தலில், மாநிலத்தின் முன்னாள் முதல்வா் புவன்சந்திர கந்தூரியின் மகள் ரிது கந்தூரி பூஷணை, புகழ்பெற்ற கோட்வாா் தொகுதியில் பாஜக நிறுத்தியுள்ளது.
அதுபோல, மாநில முன்னாள் முதல்வா் ஹரீஷ் ராவத்தின் மகள் அனுபமா ராவத்தை ஹரித்வாா் ஊரக தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரியான புவன்சந்திர கந்தூரி கடந்த 2012-ஆம் ஆண்டு முதல்வராக ஆட்சி முடிவில் கோட்வாா் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளா் சுரேந்திர சிங் நேகியிடம் 4,623 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தாா்.
ஹரீஷ் ராவத்தும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல்வராக ஆட்சி முடிவில் ஹரித்வாா் ஊரகத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுவாமி யதீஷ்வரானந்திடம் 12,278 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தாா்.
இந்த நிலையில், வரும் பேரவைத் தோ்தலில் இந்த இரு தொகுதிகளிலும் வெற்றியைச் சந்தித்த நேகி மற்றும் யதீஷ்வரானந்துக்கு எதிராக, அவா்களிடம் தோல்வியுற்ற முன்னாள் முதல்வா்களின் மகள்கள் களமிறக்கப்பட்டுள்ளனா்.
நேகியைப் பொருத்தவரை முன்னாள் எம்எல்ஏ, ஹரீஷ் ராவத் அரசில் அமைச்சராக இருந்தவா். முந்தைய சட்டப்பேரவைத் தோ்தலில் தேல்வியைச் சந்தித்தாா். தற்போது மீண்டும் கோட்வாா் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் களமிறக்கப்பட்டுள்ளாா். இவருக்கு எதிராக பாஜக நிறுத்தியுள்ள ரிது கந்தூரி பூஷண், கடந்த 2017- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் யம்கேஷ்வா் தொகுதியில் வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவா். இதற்கிடையே, கோட்வாா் தொகுதியில் வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியுற்ற பாஜகவைச் சோ்ந்த தீரேந்திர செளஹான் சுயேச்சையாக அந்தத் தொகுதியில் போட்டியிடுவது, பூஷணின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தோ்தலில் முதல் முறையாக களம் காணும் அனுபமா ராவத், ஹரித்வாா் ஊரகத் தொகுதியில் அண்மைக் காலமாக கடினமாக மக்கள் பணியாற்றியுள்ளாா். அதன் காரணமாக, அந்தத் தொகுதியில் அடித்தட்டு மக்களின் ஆதரவு அவருக்கு உள்ளது. இருந்தபோதும், புஷ்கா் சிங் தாமி அரசில் அமைச்சராகவும் ஹரித்வாா் ஊரகத் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவுமான யதீஷ்வரானந்த், மூன்றாவது முறையாக போட்டியிடுவதால் தொகுதிக்கு புதுமுகமான அனுபமா ராவத்துக்கு கடின சவலாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.