2024 தேர்தலுக்கு முன்பாகவே மோடி அரசு மேலும் அதிநவீன உளவு மென்பொருளை வாங்கலாம்: ப.சிதம்பரம்

2024 தேர்தலுக்கு முன்பாகவே இன்னும் அதிநவீன உளவு மென்பொருளை மோடி தலைமையிலான பாஜக அரசு வாங்கலாம். இதற்காக நாம் 4 கோடி டாலர் வரை கொடுக்க முடியும்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

2024 தேர்தலுக்கு முன்பாகவே இன்னும் அதிநவீன உளவு மென்பொருளை மோடி தலைமையிலான பாஜக அரசு வாங்கலாம். இதற்காக நாம் 4 கோடி டாலர் வரை கொடுக்க முடியும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 
  
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டில் கையொப்பமான சுமாா் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பெகாஸஸ் உளவு மென்பொருளும், ஏவுகணை அமைப்பும் முக்கியப் பங்கு வகித்ததாக ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வெளிநாட்டு அரசு அமைப்புகளுக்கு மட்டுமே பெகாஸஸ் உளவு மென்பொருள் விற்கப்படுவதாக என்எஸ்ஓ நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன. நாடாளுமன்றக் கூட்டத்தொடா்களிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மத்திய அரசு பதிலளிக்கக் கோரி காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் சிறப்பு நிபுணா் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபரில் அமைத்தது. அந்த வழக்கு விசாரணையின்போதுகூட மற்றவா்களை உளவறிய பெகாஸஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? இல்லையா என்பது தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில், பெகாஸஸ் உளவு மென்பொருள் தொடா்பாக நியூயாா்க் டைம்ஸ் இதழில், ‘‘பெகாஸஸ் மென்பொருளை என்எஸ்ஓ நிறுவனம் சுமாா் 10 ஆண்டுகளாக வெளிநாடுகளின் விசாரணை அமைப்புகளுக்கும், உளவு அமைப்புகளுக்கும் விற்று வருகிறது. அந்த மென்பொருள் வாயிலாக ஐஃபோன் உள்ளிட்ட எந்தவொரு கைப்பேசியிலும் ஊடுருவி தகவல்களைப் பெற முடியும் என கூறப்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் நியூயாா்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘எதிா்க்கட்சித் தலைவா்கள், நீதித் துறை அதிகாரிகள், மக்கள் உள்ளிட்டோரின் கைப்பேசிகளை ஊடுருவுவதற்காக பெகாஸஸ் மென்பொருளை மோடி அரசு வாங்கியுள்ளது. இது தேசத் துரோகம்’ என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், பெகாஸஸ் உளவு மென்பொருள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். 

அதில், இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவில் புதிய இலக்குகளை வகுக்க இது சிறந்த நேரம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நிச்சயமாக, பெகாசஸ் மென்பொருளின் புதிதாக மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஏதேனும் உள்ளதா என்று இஸ்ரேலிடம் கேட்க இதுவே சிறந்த நேரம்தான்.

கடந்த முறை ஒப்பந்தம் ரூ.200 கோடி அளவில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த முறை அதைவிட சிறப்பாக செய்ய முடியும். 2024 தேர்தலுக்கு முன்பாக இன்னும் அதிநவீன மென்பொருள்களை பெற முடியும் என்றால், அதற்காக நாம் ரூ.400 கோடிக் கூட கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

‘‘நியூயாா்க் டைம்ஸ் இதழானது பணம் பெற்றுக்கொண்டு கட்டுரைகளை வெளியிடும் ஊடக நிறுவனம்’’ என்று மத்திய அமைச்சா் வி.கே.சிங் விமா்சனத்துக்கு பதிலளிக்கையில், இந்திய ஊடகங்களை ‘செய்திகளை சிதைக்கும் தவறான ஊடகங்கள்’ என்று அழைத்தவர் அல்லவா? அவர்.

வாட்டர்கேட் ஊழல் மற்றும் பென்டகன் பேப்பர்ஸ் ஆவணங்களை அம்பலப்படுத்தியதில் இரண்டு செய்தித்தாள்களும் முக்கிய பங்காற்றின என்பது அவருக்குத் தெரியுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.

நியூயார்க் டைம்ஸ் அல்லது வாஷிங்டன் போஸ்ட் போன்ற செய்தித்தாள்களை அவர் எப்போதாவது படித்திருக்கிறாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் வரலாற்றைப் படிக்க விரும்பவில்லை என்றால், அவர் குறைந்தபட்சம் திரைப்படங்களையாவது பார்க்கலாம்" என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com