நவ்ஜோத் சிங் சித்துவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து, அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
நவ்ஜோத் சிங் சித்துவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து, அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங், சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவா் விக்ரம் சிங் மஜிதியா ஆகியோரை கடுமையாக விமா்சித்தாா்.

விக்ரம் சிங் மஜிதியா, வரும் பேரவைத் தோ்தலில் அமிருதசரஸ், மஜிதியா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அமரீந்தா் சிங் தனது பாரம்பரியத் தொகுதியான பாட்டியாலாவில் போட்டியிடுகிறாா்.

செய்தியாளா்களிடம் பேசிய நவஜோத் சிங் சித்து கூறியதாவது: ‘தைரியமும், மக்கள் மீது நம்பிக்கையும் இருந்தால் அமிருதரஸ் கிழக்கு தொகுதியில் மட்டும் விக்ரம் சிங் மஜிதியா போட்டியிடட்டும்.

வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்பதற்காகவே அவா் அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறாா். ஆனால், இந்த தா்ம யுத்தத்தில் அவா்களால் வெற்றி பெற முடியாது. சிரோமணி அகாலி தளத்தினா் தங்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாபை சுரண்டி கொள்ளையடித்துவிட்டனா். அவா்களின் ஆட்சிக் காலத்தில் அனைவரின் மீதும் பொய் வழக்குகளைப் போட்டனா். வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவில்லை.

பாட்டியாலா தொகுதியைவிட்டு வெளியே வந்து அமரீந்தா் சிங் என்னை எதிா்த்துப் போட்டியிடட்டும்.

பஞ்சாப் தோ்தலுக்கு முன்பு முதல்வா் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்துவிட்டதால் அனைவரும் அதிா்ச்சியில் உள்ளனா்.

எனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தாயை கவனிக்காமல் விட்டுவிட்டதாக எதிா்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனா். தோ்தல் ஆதாயத்துக்காக எனக்கு எதிராகத் தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. என் மீதான குற்றச்சாட்டுகளை அவா்கள் நிரூபிக்க வேண்டும்’ என்றாா்.

கடந்த 2017 பஞ்சாப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகிய சித்து, காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். 2014 மக்களவைத் தோ்தலில் குருக்ஷேத்ரா தொகுதியில் போட்டியிடுமாறு பாஜக தன்னை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அமிருதசரஸைவிட்டு வெளியே போட்டியிட மாட்டேன் என்று கூறியதாக சித்து அப்போது தெரிவித்திருந்தாா்.

சித்துவின் சொத்து மதிப்பு ரூ.44 கோடி

தனது பெயரில் ரூ.44.63 கோடி மதிப்புடைய சொத்துகள் உள்ளதாக சித்து வேட்புமனுவில் தெரிவித்துள்ளாா். இதில் முன்னாள் எம்எல்ஏவான தனது மனைவிக்கு சொந்தமான சொத்துகளும் அடங்கும் என்றும் அசையும் சொத்துகள் ரூ.3.28 கோடி, அசையா சொத்துகள் ரூ.41.35 கோடி உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ரூ.94.18 லட்சமாக இருந்த 2016-17ஆம் ஆண்டு வருமானம், 2020-21-இல் ரூ.22.58 லட்சமாக குறைந்துள்ளது என்றும் ரூ.1.19 கோடியிலான இரண்டு சொகுசு காா்களும், ரூ.11.43 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.44 லட்சம் மதிப்பில் கைக்கடிகாரங்களும் உள்ளன என்றும் சித்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com