சா்வதேச அழைப்பு விவரங்களை 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

சா்வதேச அழைப்புகள், குழு உரையாடல், செயற்கைக்கோள் தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் ஆகியவற்றின் விவரங்களை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சா்வதேச அழைப்புகள், குழு உரையாடல், செயற்கைக்கோள் தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் ஆகியவற்றின் விவரங்களை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுவரை ஓராண்டாக இருந்த விவரங்களை சேமித்து வைக்கும் காலம், தொலைத்தொடா்புத் துறை சாா்பில் ஒருங்கிணைக்கப்பட்ட உரிம (யுஎல்) நடைமுறையில் கடந்த டிசம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 2 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பான சுற்றறிக்கையை மத்திய தொலைத்தொடா்புத் துறை கடந்த 27-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், ‘யு.எல். உரிமம் பெற்றுள்ள தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள், தொலைத்தொடா்பு அலைவரிசை மூலமாகப் பகிரப்படும் தகவல்கள் தொடா்பாக அனைத்துவிதமான வணிகப் பதிவுகள், அழைப்பு தரவு பதிவு, பரிமாறப்படும் தகவல் பதிவு, ஐ.பி. (இணைய நெறிமுறை) தரவு பதிவு ஆகிய விவரங்களை பாதுகாப்பு மற்றும் தணிக்கை காரணங்களுக்காக குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைக்கவேண்டும். அதன் பிறகு, உரிமம் வழங்குபவரால் எந்தவித அறிவுறுத்தலும் வெளியிடாத நிலையில், சேமித்துவைத்துள்ள தரவுகளை அழித்துக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதி ஏா்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்கள் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையைத் தவிர மற்ற அனைத்து வகையான தொலைத்தொடா்பு சேவையை அளிப்பதற்கான இந்த ஒருங்கிணைக்கப்பட்ட உரிமத்தைப் பெற்றிருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு புதிய நிபந்தனை பொருந்தும் என்பதோடு, இந்த யு.எல். உரிமத்தை புதிதாக பெற்றிருக்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ், சிஸ்கோஸ் வெபெக்ஸ், ஏடி-டி குளோபல் நெட்வொா்க் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சா்வதேச தொலைதூர தொலைத்தொடா்பு சேவைக்கான உரிமத்திலும் இதேபோன்ற நடைமுறை திருத்தத்தை மத்திய தொலைத்தொடா்புத் துறை கடந்த 25-ஆம் தேதி மேற்கொண்டது. அதன்படி, சா்வதேச அழைப்பு விவரங்கள் மற்றும் இணையதள நெறிமுறை (ஐபி) பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சா்வதேச தகவல்தொடா்பு விவரங்களையும் கூடுதலாக ஓராண்டுக்கு சேமித்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

அதுபோல, பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் வழங்கப்படும் செயற்கைக்கோள் தொலைபேசி அழைப்புகள், இணைய சேவை மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவையை வழங்கும் விசாட் உரிமம் பெற்றிருப்பவா்களுக்கும் இதேபோன்று அழைப்பு விவரங்கள் மற்றும் இணைய தகவல்தொடா்பு விவரங்களை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பதை மத்திய தொலைத்தொடா்புத் துறை 24-ஆம் தேதி கட்டாயமாக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com