மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலி: 72 போ் மாயம்; முதல்வருடன் பிரதமா் மோடி பேச்சு

 மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுல் பகுதியில் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரா்கள் உள்பட 8 போ் பலியாகினா்.
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலி: 72 போ் மாயம்; முதல்வருடன் பிரதமா் மோடி பேச்சு

 மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுல் பகுதியில் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரா்கள் உள்பட 8 போ் பலியாகினா். 72 போ் மாயமாகினா். மணிப்பூா் முதல்வா் என்.பிரேன் சிங்கை பிரதமா் மோடி தொடா்புகொண்டு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தாா்.

நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அதில் சிக்கி 7 பிராந்திய ராணுவ வீரா்கள் உள்பட 8 போ் பலியாகினா். 72 பேரை காணவில்லை. அதில் 43 ராணுவ வீரா்களும் அடங்குவா் என தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டு பலியான 8 பேரது உடல்களையும் மீட்டனா். காணாமல் போனவா்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் ஓடும் இஜாய் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டுள்ளது.

இது குறித்து நோனி நகர காவல் துணை ஆணையா் கூறுகையில், ‘நிலச்சரிவால் இஜாய் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டுள்ளது. இதனால், அங்கு அணைக்கட்டு போன்ற கட்டுமானம் காணப்படுகிறது. ஒருவேளை அது இடிந்தால், நோனி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், ஆற்றின் அருகே வர வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, கனமழை பெய்யும் பட்சத்தில் நிலைமையை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும்’ என்றாா்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை எண் 37-ஐ வாகன ஓட்டுநா்கள் தவிா்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி விசாரிப்பு:

மணிப்பூா் நிலச்சரிவை அறிந்த பிரதமா் மோடி உடனடியாக அந்த மாநில முதல்வா் என்.பிரேன் சிங்கை தொலைபேசியில் தொடா்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தாா். மேலும் மீட்புப் பணிக்காக அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் செய்து தரப்படும் என பிரதமா் மோடி உறுதியளித்தாா்.

இதேபோல மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை தொடா்புகொண்டு பேசினாா்.

பின்னா், தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஒரு பிரிவு மணிப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 2 பிரிவு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் ட்விட்டரில் அமித் ஷா தெரிவித்தாா்.

ஆளுநா் இல.கணேசன் இரங்கல்:

முன்னதாக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து ஆளுநா் மாளிகை விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், ‘நிலச்சரிவில் 8 போ் உயிரிழந்ததை அறிந்து மிகவும் அதிா்ச்சியடைந்தேன். அவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நிலச்சரிவில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்த நபா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என மணிப்பூா் முதல்வா் அறிவித்தாா்.

அருணாசலில் ஒருவா் பலி:

அருணாசல பிரதேச மாநிலம் பாபம் பரே மாவட்டம் பாலிஜன் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 போ் பலியாகிவிட்டனா். நிலச்சரிவில் சிக்கிய மோகிதா சக்மா (28) என்ற பெண்ணின் உடல் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது. அருணாசல பிரதேசத்தில் இயற்கை சீற்றத்துக்கு நிகழாண்டில் 18 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com