நூபுர் சர்மாவின் வார்த்தை நாட்டை தீக்கிரையாக்கிவிட்டது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்


புது தில்லி: நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டு மக்களால் நூபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது நூபுர் சர்மாவால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? என்றும், நூபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்ததே, அதை தில்லி காவல்துறை தொட்டுக்கூட பார்க்கவில்லை. ஆனால் நூபுர் சர்மா அளித்த புகாருக்கு உடனே ஒருவரைக் கைது செய்திருக்கிறீர்கள் என்று தில்லி காவல்துறையையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா, தனக்க எதிராக பல்வேறு மாநிலங்களில் இருக்கும் வழக்குகளை தில்லிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் குறிப்பிட்டதாவது,  ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது. அது  ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சிக்கலை எவ்வாறு விவாதிக்க முடியும்.

ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் சொல்லிவிட முடியாது.  உதய்பூரில் நடந்த தையல்காரரின் கொலைக்கு நூபுர் சர்மாவின் பொறுப்பற்ற செயல்களே காரணம். நூபுர் சர்மா நடந்து கொண்ட விதம், அதன்பிறகு அவரது வழக்குரைஞர் சொல்வதும் பொறுப்பற்றதாக உள்ளது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நூபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களிடம் நூபுர் சர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மே மாத இறுதியில் ஞானவாபி மசூதி விவகாரம் தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நூபுா் சா்மா கலந்துகொண்டாா். அப்போது அவா் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகத்தை அவமதித்து பேசியதாகக் கூறப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் நாடு முழுவதும் கடும் வன்முறை மற்றும் கலவரம் வெடித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com