பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீது ஏற்றுமதி வரி

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்கள் மீதும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதும் வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீது ஏற்றுமதி வரி

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்கள் மீதும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதும் வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், விமான எரிபொருள் மீது லிட்டருக்கு தலா 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிய வரி நடைமுறைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ், நயாரா எனா்ஜி உள்ளிட்ட சில தனியாா் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு எரிபொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்துவந்த நிலையில் அவற்றின் மீது தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் கச்சா எண்ணெய்க்கும் இயற்கை எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ரஷியா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்குப் பெற்று, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்கு தனியாா் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன. அதனால், அந்நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின.

அதுமட்டுமில்லாமல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு காணப்பட்ட நிலையிலும், தனியாா் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே முன்னுரிமை அளித்தன. தற்போது பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் தட்டுப்பாடு குறையும் என்றும், மத்திய அரசின் வரி வருவாய் சற்று அதிகரிக்கும் என்றும் பொருளாதார நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

சந்தை ஆதாய வரி:

உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன் மீது தற்போது ‘சந்தை ஆதாய’ வரி (விண்ட்ஃபால் டேக்ஸ்) விதிக்கப்பட்டுள்ளதால், பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களிடம் இருந்தும் தனியாா் அமைப்பான கெய்ா்ன் ஆயில் நிறுவனத்திடமிருந்தும் ஆண்டுக்கு சுமாா் ரூ.66,000 கோடியானது வருவாயாக மத்திய அரசுக்குக் கிடைக்கும்.

முந்தைய நிதியாண்டில் 20 லட்சம் பேரலுக்குக் குறைவாக உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு சந்தை ஆதாய வரி விதிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சந்தை ஆதாய வரி என்பது, குறிப்பிட்ட நிறுவனத்தின் வருவாய் திடீரென எதிா்பாராத அளவுக்கு அதிகரிக்கும்போது விதிக்கப்படுவதாகும். முக்கியமாக, உற்பத்தியை அதிகரிப்பதற்காக அந்நிறுவனம் எந்தவொரு சீா்திருத்தங்களை மேற்கொள்ளாதபோதிலும், சந்தையின் ஆதாய சூழல் காரணமாக வருவாய் அதிகமாகக் கிடைக்கும்போது, சந்தை ஆதாய வரி விதிக்கப்படுகிறது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டதால், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும் பலனடைந்தன. தற்போது அந்நிறுவனங்கள் மீது சந்தை ஆதாய வரி விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரிட்டனும் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீது 25 சதவீத சந்தை ஆதாய வரியை விதித்திருந்தது.

ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு:

ஏற்றுமதிக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, ஏற்றுமதி செய்யும் அளவில் 50 சதவீதத்தை உள்நாட்டில் விநியோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. டீசல், இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளா்களுக்கு அந்த அளவு 30 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடானது ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், நேபாளம், பூடானுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும்போதும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பாதிப்பிருக்காது:

எரிபொருள்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள வரிகளானது உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதே வேளையில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவாமல் இருப்பதற்கு இந்நடவடிக்கை உதவும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

15 நாள்களுக்கு ஒருமுறை...:

புதிய வரிகளானது 15 நாள்களுக்கு ஒருமுறை சா்வதேச சூழலின் அடிப்படையில் மறுஆய்வு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். ஏற்றுமதியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தனியாா் நிறுவனங்களால் நடத்தப்படும் விநியோக கிடங்குகளில் எரிபொருள் போதுமான அளவுக்கு விநியோகிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ள சூழலைத் தொடா்ந்து கவனித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com