பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது: நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்திய குஷ்பு!

தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ் நடிகையுமான குஷ்பு சுந்தர் நடனமாடி தொண்டர்களை உற்சாகமடைய வைத்தார். 
தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ் நடிகையுமான குஷ்பு.
தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ் நடிகையுமான குஷ்பு.

ஹைதராபாத்: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு வெளியே தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ் நடிகையுமான குஷ்பு சுந்தர் நடனமாடி தொண்டர்களை உற்சாகமடைய வைத்தார். 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 2 நாள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுள்ளார். 

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை ஹைதராபாத் வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய செயற்குழுவில் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடும் நடிகை குஷ்பு.

பிரதமர் தனது உரையில், வரும் காலங்களில் குறிப்பாக குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்திப்பதற்கு கட்சிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா பெருந்தொற்று பிறகு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களின் முழுமையான பங்கேற்புடன் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை.

கட்சியின் சர்வதேச மாநாட்டை முன்னிட்டு ஹைதராபாத் நகரம் முழுவதும் பாஜக கொடிகள் மற்றும் பதாகைகளுடன் காவி நிறங்களாகவே காட்சி அளிக்கின்றன. மத்திய அரசின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பெரிய பெரிய கட்அவுட்கள் மற்றும் உயர்மட்ட பாஜக தலைவர்களின் பேனர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தேசிய பொதுச் செயலாளர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகள் கூட்டங்கள் மற்றும் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை பரேட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையுடன் பொதுக்கூட்டமும் நடைபெறும்.

ஹைதராபாத்தில் 2 நாள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழுவின் புகைப்படக் கண்காட்சி மற்றும் முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகிறது.

முன்னதாக வெள்ளிக்கிழமை, ஹைதராபாத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டத்தை நட்டா நடத்தினார். நட்டா ஹைதராபாத் வந்தவுடன் பாஜக தலைவர் மாபெரும் பேரணியும் நடத்தப்பட்டது. 

2023 இல் தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசை வீழ்த்துவதற்கான முயற்சியாக பிரமாண்டமான பாஜக மாநாட்டை நடத்துவதாகவும், 2024 இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, கட்சி கொள்கைகளில் மாற்றங்கள் குறித்தும் தேர்தல் பணிகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

பிரதமர் மோடியின் ஹைதராபாத் வருகையையொட்டி, ஹைதராபாத் நகர காவல்துறை, மாநில அரசு துறைகளுடன் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மோடி தங்கவுள்ள நோவோடெல் ஹோட்டலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஹைதராபாத் சர்வதேச மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 19 மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்களும் பங்கேற்க உள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாஜக செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தெலங்கானா அரசியலில் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com