கரூர் என்றாலே பிரம்மாண்டம் தான் : முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
கரூர் என்றாலே பிரம்மாண்டம் தான் : முதல்வர் ஸ்டாலின்
கரூர் என்றாலே பிரம்மாண்டம் தான் : முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (2.7.2022) கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பேசாமல் அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டு உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் கடல் அலையை இங்கே நான் பார்க்கிறேன். கடல் இல்லாத இந்த கரூருக்கு, மக்கள் கடலையே உருவாக்கி இருக்கிறார் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள். அலை இல்லாத கரூருக்குள் மக்கள் அலையை உருவாக்கி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அவர் அமைச்சராக வருவதற்கு முன்பு, மின்சாரத்துறை எந்த நிலைமையில் இருந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
உடனடியாகத் தீர்க்க மின்னகம் சேவை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மிகக் குறுகிய காலத்தில் ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
316 துணை மின் நிலையங்கள் ஆகிய மாபெரும் சாதனைகளைச் செய்து அந்த துறையை மீட்டெடுத்து வருகிறார்.

இதுவும் பிரமாண்டம்தான்!
கர்நாடக மாநிலத்தின் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரிக்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர். அதாவது அவ்வளவு குறுகிய அளவுதான் அந்த நீர்ப்பகுதியின் அகலம் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டின் எல்லையில் நுழையும் காவிரி ஆறானது, கரூர் மாவட்டம், குளித்தலையில் பாயும்போது விரிவடைந்து பாயும். அதனால் அதற்கு ‘காகம் கடக்கா காவிரி’ என்று பெயர். அதாவது காகம் கூட கடக்க முடியாத அளவு என்று அதன் பிரமாண்டத்தைச் சொல்வார்கள்.

கரூர் என்றாலே பிரமாண்டம்தான். அதற்கு இந்த விழாவே மிகப் பெரிய சாட்சி, எடுத்துக்காட்டு. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடியவர், மன்னிக்க வேண்டும், மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கக்கூடியவர் அமைச்சர் செந்தில்பாலாஜியும், அதேபோல் அவருக்கு துணை நின்று பணியாற்றியவர்களையும் பாராட்டுறேன், நன்றி கூற விரும்புகிறேன்.

இன்று நடைபெறும் இந்த விழாவில்,
 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 26 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 பணிகளுக்கும்,
 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளும்,
 பேரூராட்சித்துறையின் சார்பில் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கும்,
 கலை பண்பாட்டுத் துறை சார்பில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பணிக்கும்,
 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 387 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 பணிகளுக்கும்,
 மாநகராட்சித் துறை சார்பில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 பணிகளுக்கும்,
 நீர்வளத்துறை சார்பில் 91 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளுக்கும்,
என மொத்தம் 582 கோடி ரூபாய் மதிப்பிலான 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் விரைவில் உறுதியாக நான் வந்து திறக்கப் போகிறேன், விரைவாக, அந்த உறுதியை நான் முன் கூட்டியே வழங்க விரும்புகிறேன்.

 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 திட்டப்பணிகளும்,
 வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் ஒரு பணியும்
 நில அளவைப் பதிவேடுகள் துறை சார்பில் 3 திட்டப்பணிகளும்,
 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைசார்பில் 33திட்டப்பணிகளும்,
 கூட்டுறவுத் துறை சார்பில் 14 திட்டப்பணிகளும்,
 பொதுப்பணித்துறை சார்பில் 9 திட்டப்பணிகளும்,
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2 திட்டப்பணிகளும்,
 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (சத்துணவு) சார்பில், 6 திட்டப்பணிகளும்,
 நபார்டு மற்றும் கிராம சாலைகள் சார்பில் 3 திட்டப்பணிகளும்,
 நீர்வளத்துறை சார்பில் 19 திட்டப்பணிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றின் மொத்த மதிப்பு என்னவென்று கேட்டால் 28 கோடி ரூபாய்.

 ஏராளமான சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
 அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
 உணவு தானியக் கிடங்குகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
 பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
 குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
 அங்கன்வாடி கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
 பள்ளிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
 பள்ளிகளில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தையும் நான் இங்கே ஊர் வாரியாக சொல்லத் தொடங்கினால், நேரம் அதிகமாகும். அதனால், ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு ஊருக்கும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது. புதிதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டும் இருக்கிறது.

இந்த ஓராண்டு காலத்தில் ஓய்வில்லாமல் மக்கள் பணியை ஆற்றி வருகிறோம் என்பதற்கு இந்த கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகளே சாட்சியாக அமைந்திருக்கிறது!

பொதுவாக, புதிதாக ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்திடம் முதல் ஆறு மாத காலம் எதையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். இது தான் வழக்கம். 

“இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள், எனவே அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கலாம்”- அப்படி என்று சொல்வார்கள்.

துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் காலம், முதல் ஆறு மாத காலம். அடுத்த ஆறு மாத காலம் என்பது திட்டமிடும் காலமாக அது அமையும். இரண்டாவது ஆண்டுதான் செயல்படுத்தத் தொடங்கும் காலமாக அமையும். ஆனால் ஆட்சிக்கு வந்த நொடியில் இருந்து செயல்படுத்தும் காலமாகத் தொடங்கிய ஆட்சிதான் திமுக ஆட்சி!

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி! ஏனென்றால் தலைவர் கலைஞர் அவர்கள் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டு இருக்கிறார். கருணாநிதி இருந்தால், என்ன நினைப்பார், என்ன சிந்திப்பார், எப்படிச் செயல்படுத்துவார் என்று நித்தமும் சிந்தித்து, நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஓராண்டு காலத்தில்
திட்டமிட்டோம் -
செயல்பட்டோம் -
உருவாக்கினோம் -
மக்கள் கையில் கொடுத்துள்ளோம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள காலமாக இந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்திற்கென்று அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை, அனைத்தையும் அல்ல, பலவற்றை, இந்த ஓராண்டிலேயே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகின்றபோது சொன்னரே, கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவோம் என்று சொன்னோம். செய்து காட்டியிருக்கிறோம்!

புகளூர், பள்ளப்பட்டி பேரூராட்சிகளை நகராட்சிகள் ஆக்குவோம் என்று சொன்னோம். அதை நிறைவேற்றி இருக்கிறோம்.

அரவக்குறிச்சியில் அரசு கலை - அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்றியிருக்கிறோம். 

கரூரில் சுற்று வட்டச் சாலை, சாயப்பட்டறைப் பூங்கா, காமராசர் மார்க்கெட்டில் புதிய வளாகம் ஆகியவை அறிவிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஜவுளித்தொழிலில் தலைசிறந்து விளங்கும் இந்த கரூர் மாவட்டத்தில், இந்தத் தொழிலை மேலும் மேம்படுத்திட சிப்காட் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தோம்.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் இப்போது நடைபெறத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னோர்களே, நேற்று இரவு நான் கரூருக்கு வந்தவுடனே இந்த மாவட்டத்தில் உட்பட்டிருக்கக்கூடிய தொழில் முனைவோர்கள், என்னை சந்திக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். கிட்டதட்ட ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அவரோடு நான் கலந்து பேசினேன். அவர்கள் பேசுகிறபோது சொன்னார்கள், நமது ஆட்சியிலே இப்போது ஒரு வருடத்தில் கிடைத்திருக்கக்கூடிய நன்மைக்கு நன்றி தெரிவித்தார்கள் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com