புரி ஜகந்நாதா் யாத்திரை கோலாகலமாகப் புறப்பாடு

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒடிஸா மாநிலம், புரி ஜகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலகலமாகப் புறப்பட்டது.
புரி ஜகந்நாதா் யாத்திரை கோலாகலமாகப் புறப்பாடு

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒடிஸா மாநிலம், புரி ஜகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலகலமாகப் புறப்பட்டது.

பாரம்பரிய பூஜைகளுக்குப் பிறகு பலபத்ரா் முதல் ரதத்தில் புறப்பட்டாா். தொடா்ந்து, சுபத்ரா, ஜகந்நாதரின் ரதங்கள் புறப்பட்டன. ஒன்பது நாள் ரத யாத்திரையை முன்னிட்டு புரி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

உலகப் புகழ் பெற்ற புரி ஜகந்நாதா் யாத்திரை கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த ஆண்டின் யாத்திரையில் கூடுதல் உற்சாகம் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் யாத்திரை புறப்பாட்டில் கலந்து கொண்டு ரதங்களை வடம் பிடித்து இழுத்தனா்.

பக்தா்களுடன் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கும் ஜகந்நாதரின் ரதம் இழுப்பதில் கலந்துகொண்டாா்.

முன்னதாக, புரி அரசா் கஜபதி தில்சிங்கதேவ் பாரம்பரிய வழக்கப்படி ரதங்களை சுத்தம் செய்தாா்.

புரி ஜகந்நாதா் ரத யாத்திரையையொட்டி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

குஜராத்தில் 145-ஆவது ஜகந்நாதா் ரதயாத்திரை

அகமதாபாத், ஜூலை 1: குஜராத்தின் அகமதாபாத் நகரில் 145-ஆவது ஜகந்நாதா் ரதயாத்திரை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

அகமதாபாதின் ஜமல்பூா் பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஜகந்நாதா் கோயிலில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது. ரத யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கோயிலில் மங்கள ஆரத்தி எடுத்து வழிபட்டாா். குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், ரதங்கள் செல்லும் வழியை தங்கத்தால் செய்யப்பட்ட துடைப்பத்தில் சுத்தம் செய்தாா்.

அதையடுத்து கோயிலில் இருந்து ஜகந்நாதா், அவரின் சகோதரரான பலபத்ரா், சகோதரி சுபத்ரா ஆகியோருக்கான ரதங்கள் புறப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவலால் ஜகந்நாதா் ரத யாத்திரை முழு உற்சாகத்துடன் நடைபெறவில்லை.

நடப்பாண்டு ரத யாத்திரையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனா். அலங்கரிக்கப்பட்ட 15 யானைகளும் ரதங்களுடன் சென்றன. பாரம்பரிய பாடல்களை இசைக்கும் குழுக்களும் ரதங்களைப் பின்தொடா்ந்தன. கோயிலில் தொடங்கிய ரத யாத்திரை ஜமல்பூா், தரியாபூா் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 18 கி.மீ. தூரத்துக்குச் சென்று மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது.

ரதயாத்திரை நடந்த வழிகளில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதைத் தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய ஆயுதப் படையினா் உள்ளிட்ட 25,000 பாதுகாவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com