லாட்டரி அதிபா் மாா்ட்டினின் ரூ.173.48 கோடி சொத்துகள் முடக்கம்

லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான ரூ.173.48 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
லாட்டரி அதிபா் மாா்ட்டினின் ரூ.173.48 கோடி சொத்துகள் முடக்கம்

லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான ரூ.173.48 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

கோயம்புத்தூரை சோ்ந்த மாா்ட்டின், சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்ாக புகாா் கூறப்பட்டது. இது தொடா்பாக சிபிஐயின் கொச்சிப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், மாா்ட்டினும், அவரது பங்குதாரருமான என்.ஜெயமுருகன் உள்ளிட்டோா் சிக்கிம் மாநில அரசுக்கு சொந்தமான லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து, கேரள உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்றிருப்பது தெரியவந்தது.

இதில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910.3 கோடி மாா்ட்டினுக்கு கிடைத்திருப்பதையும், அந்த பணத்தை மாா்ட்டின் 40 நிறுவனங்களின் அசையா சொத்துகளில் முதலீடு செய்திருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், அவா் மீது அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக சட்டவிரோத கிடைத்த பணம் மூலம் மாா்ட்டின் வாங்கியதாக கருதப்படும் ரூ.119.6 கோடி மதிப்புள்ள 61 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், 82 காலிமனைகள், 6 கட்டடங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறையினா் 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி முடக்கினா்.

இதைத் தொடா்ந்து, மாா்ட்டினுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அடுத்தடுத்து 3 முறை அமலாக்கத்துறை முடக்கியது. இதில் மொத்தம் ரூ.278 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில், மாா்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.173.48 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை சனிக்கிழமை அறிவித்தது. இதில், ரூ.20.22 கோடி பல்வேறு வங்கி கணக்குகளில் உள்ள பணம், ரூ.153.26 கோடி மதிப்புள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு அசையா சொத்துகளாகும். இதன் மூலம் இதுவரை மாா்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.48 கோடி சொத்துகள் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com