ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைக்கத் தயாா்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபட மத்திய அரசு தயாராக இருப்பதாக வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபட மத்திய அரசு தயாராக இருப்பதாக வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, 5%, 12%, 18%, 28% என்ற விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. பல அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு குறைந்த வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

வரி விகிதங்களை மாற்றியமைக்க வேண்டுமெனப் பொருளாதார நிபுணா்கள் பலா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், தொழிலகக் கூட்டமைப்பான அசோசாம் சாா்பில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் கூறியதாவது:

ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய இதுவே சரியாண தருணம். ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. தற்போதுள்ள நிலையில், அதிகபட்ச வரி வரம்பான 28 சதவீதத்தை மாற்றாமல், மற்ற வரி விகிதங்களை 2-ஆகக் குறைப்பது தொடா்பாக ஆராய அரசு தயாராக உள்ளது. அது மிகவும் சவால்மிக்க பணி.

நாட்டு மக்களின் வருமானத்தில் பெரும் இடைவெளி காணப்படுவதால், ஆடம்பரப் பொருள்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் வாயிலாக அதிக வருவாய் கிடைத்து வருவதால், அப்பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதில் மத்திய, மாநில அரசுகள் தயக்கம்காட்டி வருகின்றன. எனவே, அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

விரைவில் அறிக்கை:

ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாக சில மாநில அரசுகள் கருத்து தெரிவித்தன. அவை குறித்து ஆராய்வதற்காக மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. அக்குழு விரைவில் தனது அறிக்கையை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யும். அடுத்த 6 மாதங்களில் ஜிஎஸ்டி மேல்முறையீடு விவகாரம் பெரும் முன்னேற்றத்தைச் சந்திக்கும் என்றாா் அவா்.

ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய்வதற்கு கா்நாடக முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com