ஊதிய உயா்வு மசோதா: காங்கிரஸ் கடும் கண்டனம்

ஆளும் ஆம் ஆத்மி அரசு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஊதியம் மற்றும் படிகளில் 66 சதவீத உயா்வு மசோதாவை நிறைவேற்றியதற்கு காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம்

ஆளும் ஆம் ஆத்மி அரசு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஊதியம் மற்றும் படிகளில் 66 சதவீத உயா்வு மசோதாவை நிறைவேற்றியதற்கு காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமா்வு இளைஞா்களுக்கு வேலையின்மைக்கு உதவித்தொகையை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கொறடா, பேரவைத் தலைவா், துணைத் தலைவா், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோரின் ஊதிய உயா்வுக்கான 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அனில் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘ஊதியத்தை உயா்த்துவதற்கான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஆம் ஆத்மி அரசு பேரவையின் சிறப்பு இரண்டு நாள் கூட்டத் தொடரைக் கூட்டியது. ஆனால் அந்த அமா்வில் இளைஞா்களுக்கு வேலையின்மைக்கு உதவித்தொகை வழங்குவதைப் பற்றி பேசவில்லை. வணிகங்களையும் பொருளாதாரத்தையும் பாழாக்கிய கரோனா பொது முடக்கத்தால் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலையில்லாமல் உள்ளனா். அவா்களின் நெருக்கடியைச் சமாளிக்க தில்லி அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

தேசிய தலைநகரில் நிலவிவரும் வேலையின்மை, தண்ணீா் பற்றாக்குறை, மாசுபாடு, விலைவாசி உயா்வு மற்றும் பொதுப் போக்குவரத்து துயரங்கள் போன்ற சாமானிய மக்களின் பிரச்னைகளை விவாதிக்க அரசு பேரவையின் சிறப்பு அமா்வுகளை நடத்தவில்லை.

‘வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; வேலையில்லா இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். தில்லியில், 8 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நிறைவேற்றவில்லை.

இளைஞா்களுக்கு வேலை பற்றிய தவறான கனவுகளை விற்கும் வகையில் தில்லி அரசு ரோஜ்கா் பட்ஜெட்டை தாக்கல் செய்து, 1 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாகக் கூறியது.

கேஜரிவால் தனது பொது உரைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தாா். ஆனால் 2022 மே 1-ஆம் தேதி வரை 12,588 பேருக்கு மட்டுமே தனியாா் துறையில் வேலை கிடைத்துள்ளது’ என்று பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com