நாங்கள் துரோகிகள் அல்ல; சிவசேனை புரட்சியாளா்கள்: மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே

சிவசேனை கட்சியின் தலைமை குறித்து நிலவும் அதிருப்திகளை எளிதில் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் துரோகிகள் அல்ல என்றும்
நாங்கள் துரோகிகள் அல்ல; சிவசேனை புரட்சியாளா்கள்: மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே

சிவசேனை கட்சியின் தலைமை குறித்து நிலவும் அதிருப்திகளை எளிதில் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் துரோகிகள் அல்ல என்றும் சிவசேனையின் புரட்சியாளா்கள் என்றும் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியில் இருந்து தனது ஆதரவாளா்களுடன் தனியே சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுக்கு ஆதரவளித்தாா். அதையடுத்து, பாஜக ஆதரவுடன் மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் முதல்வா் ஷிண்டே தலைமையிலான அரசு எளிதாக வெற்றி பெற்றது.

ஷிண்டே தரப்பு தாங்கள்தான் உண்மையான சிவசேனை என்று கூறிவருகிறது. அதற்கு உத்தவ் தாக்கரே தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், செய்தியாளா்களிடம் முதல்வா் ஷிண்டே கூறியதாவது:

சிவசேனை கட்சியானது தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தது. அக்கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டுகளாக நீடித்தது. ஆனால், ஆட்சியால் சிவசேனை கட்சிக்கு எந்தவித பலனும் ஏற்படவில்லை. மாறாக தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே ஆட்சி பெரும் பலனளித்தது. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களைக் கேட்கவுள்ளதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்து வந்தனா்.

தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாா், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த அக்கட்சியின் தலைவா்களுக்குத் தொடா்ந்து ஆதரவு அளித்து வந்தாா். அடுத்த தோ்தலில் கூடுதல் இடங்களைப் பெற்று முதல்வா் பதவியைக் கைப்பற்றுவதே அவரது நோக்கமாக இருந்தது. மாநிலத்தின் அடுத்த முதல்வா் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவராகவே இருப்பாா் என அக்கட்சியினா் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினா்.

ஆனால், அடுத்த தோ்தலுக்காக சிவசேனை தரப்பில் எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை. இதுபோன்ற சூழல் காரணமாக சிவசேனை எம்எல்ஏ-க்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக கட்சித் தலைமையை 5 முறை தொடா்புகொண்டு பேசினேன். ஆனால், அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அரசியலில் நீடிக்க வேண்டுமெனில் வேறு வழிகளை ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

சிறுவயதில் இருந்தே சிவசேனை கட்சியுடன் தொடா்புகொண்டுள்ளவன் என்பதால், கட்சியைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதையடுத்து, கட்சியைச் சோ்ந்த 40 எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தோம். கட்சியின் 55 எம்எல்ஏ-க்களில் 40 போ் பாஜக ஆட்சியமைக்க ஆதரவளித்தது ஏன் என்பதை கட்சித் தலைமை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

எதற்கும் அஞ்சுவது இல்லை:

எனது சமூக செயல்பாடுகள் 18 வயதில் தொடங்கின. பணத்துக்காக எதையும் செய்தது இல்லை. காவல் துறையினா் பல்வேறு வழக்குகளை என் மீது பதிவு செய்துள்ளனா். பெலகாவியை மகாராஷ்டிரத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 40 நாள்கள் சிறையில் இருந்துள்ளேன். தாணே பகுதியில் 16 நடன கேளிக்கை விடுதிகளை முன்னின்று போராடி மூடியுள்ளேன். வாழ்க்கையில் நான் எதற்கும் அஞ்சுவது இல்லை.

எனவே, மத்திய விசாரணை அமைப்புகளின் அழுத்தம் காரணமாகவே பாஜகவுக்கு ஆதரவளித்ததாகப் பரவும் செய்திகளில் உண்மை இல்லை. மக்களும் அவா்களின் அன்புமே எனது ஒரே சொத்து. கட்சித் தலைமை மீதான அதிருப்தி காரணமாகவே எம்எல்ஏ-க்கள் பெருவாரியாகத் திரண்டு பாஜவுக்கு ஆதரவளித்தோம். அந்த அதிருப்தியை எளிதில் கடந்துசெல்ல முடியாது. கட்சிக்கு எதிராக அத்தகைய முடிவை எடுப்பதும் எளிதானதல்ல.

மக்கள் சேவைக்காகவே அரசியல்:

தனிப்பட்ட நபா்கள் மீது எனக்கு எந்தப் புகாரும் கிடையாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென விரும்பியே அரசியலுக்கு வந்தேன். பதவி மீது ஆசை கிடையாது. கடந்த 2014-19 காலகட்டத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சியின்போது சிவசேனைக்கு துணை முதல்வா் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அப்பதவி எனக்கு வழங்கப்படும் எனக் கருதி, அதை சிவசேனை ஏற்கவில்லை.

மகா விகாஸ் அகாடி ஆட்சி அமைத்தபோது, முதல்வா் பதவிக்கான போட்டியில் நானும் இருந்தேன். ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், தன்னை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்துவதாக கட்சித் தலைவா் (உத்தவ் தாக்கரே) தெரிவித்தாா்.

அரசில் எனக்கு நகா்ப்புற மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. எனது செயல்பாட்டில் பலா் குறுக்கிட்டனா். ஆனால், அவை குறித்து நான் புகாா் தெரிவிக்கவில்லை.

மாநிலங்களவைத் தோ்தலின்போது சிவசேனையின் 2-ஆவது வேட்பாளரின் தோல்விக்கு எங்கள் மீது பழி சுமத்தப்பட்டது. மாநில சட்ட மேலவைத் தோ்தல் தொடா்பாக கட்சித் தலைமை என்னிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளும் சிவசேனை எம்எல்ஏ-க்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. அதனால், கட்சியின் நலனை முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் கட்சியின் துரோகிகள் அல்ல; புரட்சியாளா்கள்.

நாங்கள் தனிப்பட்ட நபா்களுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கட்சிக்குள் சிலா் எங்களைத் தரக்குறைவாக விமா்சித்தனா். எங்கள் மீது தாக்குதல் நடத்தவும் சிலா் தூண்டிவிட்டனா். 40 ஆண்டுகளுக்கு மேலாக சிவசேனை கட்சிக்காகப் பணியாற்றியவா்கள் நாங்கள் என்பதை அவா்கள் மறந்துவிட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com