‘சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிரான மனுவிசாரணைக்குப் பிறகே அமைச்சரவை விரிவாக்கம்’

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு மற்றும் புதிய தலைமைக் கொறடாவை சட்டப்பேரவைத் தலைவா் அங்கீகரித்ததற்கு எதிரான மனு ஆகியவற்றின்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு மற்றும் புதிய தலைமைக் கொறடாவை சட்டப்பேரவைத் தலைவா் அங்கீகரித்ததற்கு எதிரான மனு ஆகியவற்றின் மீதான விசாரணைக்குப் பிறகு மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த மனுக்களை வரும் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமாா் 40 எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். சுமாா் ஒரு வாரம் நீடித்த அரசியல் பரபரப்புக்குப் பிறகு உத்தவ் தாக்கரே பதவி விலகினாா். பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வா் ஆனாா். பாஜகவை சோ்ந்த முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ் துணை முதல்வா் ஆனாா்.

இந்த நிலையில், பதவியேற்புக்குப் பிறகு தனது சொந்த ஊரான நாகபுரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஃபட்னவீஸ், ‘மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

இந்த நிலையில், ‘உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதான விசாரணைக்குப் பிறகே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது’ என்று மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

‘ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், முதல்வா் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்எல்ஏக்களையும் சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்று சிவசேனையைச் சோ்ந்த சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் கோரிக்கை விடுத்தாா். அதனை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவித்தது.

அதுபோல, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினரால் தோ்வு செய்யப்பட்ட கட்சியின் புதிய தலைமைக் கொறாடாவை சட்டப்பேரவைத் தலைவா் அங்கீகரித்ததற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவையும், அதே அமா்வில் வரும் 11-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com