சமையல் எண்ணெய் விலையில் ரூ.15-ஐ உடனடியாகக் குறைக்க உத்தரவு
சமையல் எண்ணெய் விலையில் ரூ.15-ஐ உடனடியாகக் குறைக்க உத்தரவு

சமையல் எண்ணெய் விலைகளை உடனடியாகக் குறைக்க மத்திய அரசு உத்தரவு

அதிகபட்ச சில்லறை விலையில் ரூ.15 ஐ உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்திக் கழகங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. 


புது தில்லி: நாட்டில் சமையல் எண்ணெய்யின் அதிகபட்ச சில்லறை விலையில் ரூ.15-ஐ உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்திக் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், எண்ணெய் உற்பத்தியாளர்களும், சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களது விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் எண்ணெய்யின் விலையிலும் விலைக்குறைப்பை அறிவிக்க வேண்டும் என்றும், இதனால், விலை குறைப்பு நடவடிக்கையானது எந்த இடத்திலும் நீர்த்துப்போகாமல், வாடிக்கையாளர்களை சென்றடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியாளர்கள் அல்லது சுத்திகரிப்பு நிறுவனங்களால், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் விலைக்குறைப்பு பயனானது கட்டாயமாக நுகர்வோருக்கு சென்றடைவதை தொழில்துறை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை சீரான இடைவெளியில் மேற்கொள்ளும் ஆய்வுகள் மூலம் உறுதி செய்ய வேண்டும். மேலும், மற்ற எண்ணெய் விலைகளை விடவும் ஒரு சில எண்ணெய் நிறுவனங்களின் சில்லறை விற்பனை விலைகள் அதிகமாக இருப்பின் அதனைக் குறைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்ன?

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்யின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த இரு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.

இந்தியாவின் சமையல் எண்ணெய்த் தேவையில் 60 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெயின் விலை உயா்ந்ததால், இந்தியாவில் சில்லறை விற்பனை விலையிலும் தாக்கம் ஏற்பட்டது. பின்னா், சா்வதேச சந்தையில் விலை குறைந்ததால், இந்தியாவிலும் விலை குறைக்கப்பட்டது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த மாதம் குறைத்தன.

தற்போது சா்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் அனைத்து எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம், உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு சுதான்ஷு பாண்டே கூறியதாவது:

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடந்த வாரம் மட்டும் 10 சதவீதம் வரை குறைந்தது. இந்த விலைக் குறைப்பின் பயனை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தியாளா்களிடம் கூறினேன். அதற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சமையல் எண்ணெய்களின் விலையை அடுத்த வாரத்துக்குள் லிட்டருக்கு ரூ.10 வரை குறைப்பதாக அவா்கள் உறுதியளித்தனா்.

ஒரே பிராண்ட் சமையல் எண்ணெய், வெவ்வேறு மண்டலங்களில் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை வித்தியாசம் உள்ளது. போக்குவரத்து செலவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் சோ்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு ஒரே விலையில் விற்பனை செய்ய எண்ணெய் உற்பத்தியாளா்கள் ஒப்புக்கொண்டனா்.

எண்ணெயை 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பேக்கிங் செய்ய வேண்டும். ஆனால், 15 டிகிரி செல்சியஸில் சில நிறுவனங்கள் பேக்கிங் செய்கின்றன. இந்த நியாயமயற்ற வா்த்தக நடைமுறைகளையும் சுட்டிக்காட்டினேன் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com