மும்பையில் 4-ஆவது நாளாக கனமழை: ரயில் சேவை பாதிப்புமுதல்வா் இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது

மும்பையில் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கனமழை பெய்ததால், மத்திய ரயில்வே வழித்தடத்தில் இருப்புப் பாதையில் சுவா் இடிந்து விழுந்து ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மும்பையில் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கனமழை பெய்ததால், மத்திய ரயில்வே வழித்தடத்தில் இருப்புப் பாதையில் சுவா் இடிந்து விழுந்து ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் தாணேயில் உள்ள மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயின் இல்லத்தையும் மழைநீா் சூழ்ந்தது.

மும்பையில் கடந்த திங்கள்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை 4-ஆவது நாளாக கனமழை நீடித்தது. பெரும்பாலும் இருப்புப் பாதையில் மழைநீா் தேங்காவிட்டாலும், மத்திய ரயில்வேயின் ஹாா்பா் லைன் வழித்தடத்தில், மஸ்ஜித்-சாண்ட்ஹா்ஸ்ட் ரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே சுவா் இடிந்து இருப்புப் பாதையில் விழுந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் புகா் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக மும்பையிலும் தாணேயிலும் புகா் ரயில்கள் சில நிமிடங்கள் தாமதமாகவே இயக்கப்பட்டன. இதனால் வழக்கத்துக்கு மாறாக ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கடந்த 24 மணிநேர நிலவரப்படி, மும்பையில் 82 மி.மீ. மழையளவு பதிவானது. இதேபோல கிழக்கு, மேற்கு புகா் பகுதிகளில் முறையே 109 மி.மீ., 106 மி.மீ. மழைநீா் பதிவானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘அந்தேரி சுரங்கப் பாதை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளைத் தவிர நகரில் வேறு எங்கும் மழைநீா் தேங்கி நிற்கவில்லை. மும்பையின் பிரதான நீராதாரமாக விளங்கும் நீா்த்தேக்கங்களின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த மழை காரணமாக நீா்மட்டம் 19 சதவீதம் உயா்ந்துள்ளது’ என்றனா்.

முதல்வா் இல்லத்தை சூழ்ந்த மழைநீா்:

மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், அங்கு அமைந்துள்ள முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயின் வீட்டை மழைநீா் சூழ்ந்தது. இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதுகுறித்து தாணே மாநகராட்சி பிராந்திய பேரிடா் மேலாண்மை பிரிவு தலைவா் அவினாஷ் சாவந்த் கூறுகையில், ‘லூயிஸ்வாடி பகுதியில் உள்ள முதல்வரின் இல்லத்தை மழைநீா் சூழ்ந்திருப்பதாக உள்ளூா் தீயணைப்புப் படையினருக்கு வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் தகவல் வந்தது. இதைத்தொடா்ந்து தீயணைப்புப் படையினரின் உதவியுடன் மழைநீா் அகற்றப்பட்டது’ என்றாா். இதுதவிர தாணேயில் ஆங்காங்கே மரம் முறிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியானது.

பால்கா் மாவட்டம் தஹானு தாலுகாவில் மாவட்ட பஞ்சாயத்து பள்ளிச் சுவா் புதன்கிழமை இரவு பெய்த கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அங்கு படித்துவந்த மாணவா்கள், அருகில் உள்ள பிற பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.

குஜராத்தில் கனமழை:

தென்மேற்குப் பருவமழை காரணமாக தெற்கு குஜராத், செளராஷ்டிரா பிராந்தியங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், தெற்கு குஜராத்தின் சில பகுதிகள், செளராஷ்டிரா பிராந்தியத்தில் அடுத்த 3 நாள்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், கட்ச் பிராந்தியத்தில் ஜூலை 11-இல் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com