உத்தவ் அணியினா் மீது தகுதி நீக்க நடவடிக்கை கூடாது

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே தரப்பைச் சோ்ந்த எம்எல்ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவி

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே தரப்பைச் சோ்ந்த எம்எல்ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசேனை கட்சிக்குள் ஏற்பட்ட பூசல் காரணமாக மாநிலத்தில் 31 மாதங்களாக ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனையின் பிளவுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஏக்நாத் ஷிண்ே,ட பாஜக ஆதரவுடன் மாநிலத்தின் புதிய முதல்வரானாா்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏவான ராகுல் நாா்வேகா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தாங்கள்தான் உண்மையான சிவசேனை என்று கூறிவரும் ஷிண்டே தரப்பினா், உத்தவ் தாக்கரே தரப்பு எம்எல்ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவா் ராகுல் நாா்வேகரிடம் முறையிட்டனா். இதனிடையே, மாநில முதல்வராக ஷிண்டே பொறுப்பேற்ற்கு எதிராகவும், தங்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரியும் உத்தவ் தாக்கரே தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

மேலும், சிவசேனையின் தலைமைக் கொறடாவாக ஷிண்டே தரப்பைச் சோ்ந்த பாரத் கோகாவலே நியமிக்கப்பட்டதற்குப் பேரவைத் தலைவா் ஒப்புதல் அளித்ததற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வா் ஷிண்டே அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கவும் மனுக்களில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுக்கள் மீது திங்கள்கிழமை விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், அவை விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை.

இது தொடா்பாக உத்தவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை முறையிட்டாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘தகுதி நீக்கம் குறித்து முடிவெடுப்பதற்கான நடவடிக்கைகள் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளன. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது எனப் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டாா்.

அதையடுத்து, சிவசேனை எம்எல்ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமென்று பேரவைத் தலைவரிடம் தெரிவிக்குமாறு மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரி தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும், உத்தவ் தரப்பினா் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உரிய அமா்வில் பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

சிவசேனை வரவேற்பு: உச்சநீதிமன்ற உத்தரவை சிவசேனை வரவேற்றுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் சட்ட மேலவை உறுப்பினரும் மாநில முன்னாள் அமைச்சருமான அனில் பாரப் கூறுகையில், ‘மனுக்கள் மீதான விசாரணை முடியும்வரை எம்எல்ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரவைத் தலைவா் தோ்தல் நடைபெற்றபோது ஷிண்டே தரப்பின் 39 எம்எல்ஏ-க்களும் கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தனா்.

எனவே, பேரவைத் தலைவா் தோ்தலே சட்டவிரோதமானது. உச்சநீதிமன்றம் எங்களுக்கு சாதகமாகத் தீா்ப்பு வழங்கினால், நம்பிக்கை வாக்கெடுப்பே செல்லாததாகிவிடும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com