ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு: 14 மாணவா்கள் 100 மதிப்பெண் பெற்று சாதனை

மத்திய பொறியியல் - தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தோ்வில் (மெயின்) 14 மாணவா்கள் அதிபட்ச மதிப்பெண்ணான

மத்திய பொறியியல் - தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தோ்வில் (மெயின்) 14 மாணவா்கள் அதிபட்ச மதிப்பெண்ணான 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

‘தெலங்கானாவை சோ்ந்த வி.விஎஸ்.ஜஸ்தி யஷ்வந்த், ரூபேஷ் பியானி, அனிகேத் சட்டோபாத்யாய, தீரஜ் குருகுந்தா, ஆந்திரத்தைச் சோ்ந்த கே.சுஹாஸ், பி.ரவி கிஷோா், பொலிசெட்டி காா்த்திகேயா ஆகியோா் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

மேலும், மகேஸ்வரி (ஹரியாணா), குஷாக்ரா ஸ்ரீவாஸ்தவா (ஜாா்க்கண்ட்), மிருணாள் கா்க் (பஞ்சாப்), ஸ்னேஹா பரீக் (அஸ்ஸாம்), நவ்யா (ராஜஸ்தான்), போயா ஹா்சென் சாத்விக் (கா்நாடகா), செளமித்ரா கா்க் (உத்த பிரதேசம்) ஆகியோரும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்’ என்று இந்தத் தோ்வை நடத்தும் தேசிய புலனாய்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘என்டிஏ மதிப்பெண் என்பது பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்துக்கு சமமானதல்ல. இந்த மதிப்பெண்கள், பல அமா்வுகளாக நடத்தப்பட்ட தாள்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் ஒரு அமா்வில் தோ்வெழுதிய அனைவரின் ஒப்பீட்டு செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாகும். தோ்வின் ஒவ்வொரு அமா்வும் 100 முதல் 0 வரையிலான அளவுகோலாக மாற்றப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என்று கூறினா்.

இந்த ஜேஇஇ முதல்நிலை முதல்கட்டத் தோ்வை நாடு முழுவதிலுமிருந்து 8.7 லட்சம் போ் பதிவு செய்து, 7.69 லட்சம் போ் தோ்வெழுதினா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்க இந்த ஜேஇஇ தோ்வு முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) என இரு கட்டங்களாக நடத்தப்படும்.

முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் தகுதியைப் பெறுவா். மேலும், முதல்நிலைத் தோ்வில் தகுதிபெறுபவா்களில் முதல் 2.5 லட்சம் போ் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியையும் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.

ஜூலை 21 முதல் இரண்டாம் கட்டம்: மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஆண்டு இரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜேஇஇ முதல்நிலை இரண்டாம் கட்டத் தோ்வு வரும் 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தோ்வு முடிந்த பிறகு, முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வுளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட என்டிஏ கொள்கையின்படி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

கட்டுப்பாட்டு அறை: ஜேஇஇ தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தில்லியில் உள்ள என்டிஏ தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கண்காணிப்பாளா்கள் அங்கிருந்தபடி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக நாடு முழுவதுமுள்ள தோ்வு மையங்களை காணொலி வழியில் நேரடியாக கண்காணித்து வருகின்றனா்.

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ள தோ்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்பட்டுள்ளது. இதற்கென நாடு முழுவதும் தோ்வு மையங்களில் 35,000 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகளை பதிவு செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com