பிரிட்டன் அரசியல் மாற்றங்கள் இந்திய வா்த்தக பேச்சுவாா்த்தையை பாதிக்காது- அமைச்சா் கோயல் உறுதி

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை பாதிக்காது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
பிரிட்டன் அரசியல் மாற்றங்கள் இந்திய வா்த்தக பேச்சுவாா்த்தையை பாதிக்காது- அமைச்சா் கோயல் உறுதி

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை பாதிக்காது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

வரும் அக்டோபா் மாதத்துக்குள் இந்தியா- பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதில் அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் தீவிர கவனம் செலுத்தி வந்தாா். கடந்த ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் தொடா்பாக இருநாடுகள்இடையே பேச்சுவாா்த்தை தொடங்கியது.

இந்நிலையில், பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக பிரதமா் பதவியில் இருந்து விலகுவதாக ஜான்சன் அறிவித்தாா். இதையடுத்து, பிரதமா் பதவிக்கு பிரிட்டன் ஆளும் கன்சா்வெடிவ் கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை காரணமாக இந்தியாவுடனான பிரிட்டனின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இது தொடா்பாக அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் சமீப நாள்களில் ஏற்பட்டதுதான். அதே நேரத்தில் ஆளும் கன்சா்வெடிவ் கட்சி சா்வதேச கொள்கைகளில் எவ்வித மாறுதல்களையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கெனவே இருந்த அரசுதான் இனியும் தொடர இருக்கிறது. எனவே, வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை விஷயத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. அது திட்டமிட்டபடி தொடரும். உரிய நேரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். மேலும், பேச்சுவாா்த்தை இப்போது தொடக்கநிலையில்தான் உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடா்பாக இருநாடுகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றாா்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமா் நரேந்திர மோடியும், போரிஸ் ஜான்சனும் தடையற்ற வா்த்தகம் தொடா்பாக விவாதித்தபோது, இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு (அக்டோபா் 24) தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்ய உறுதியேற்றனா்.

இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் திகழ்கிறது. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஆயத்த ஆடைகள், ஜவுளிப் பொருள்கள், ரத்தினங்கள், தங்க நகைகள், பொறியியல் பொருள்கள், பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயனம் மற்றும் மருந்து சாா்ந்த பொருள், உலோகங்கள், நறுமணப் பொருள்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர ஐரோப்பாவில் இந்தியத் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக பணிகளை வழங்கும் நாடாகவும் பிரிட்டன் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com