குடியரசுத் தலைவர் தேர்தல்: முர்முவுக்கு சிவசேனை ஆதரவு

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவை ஆதரிப்பதாக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
குடியரசுத் தலைவர் தேர்தல்: முர்முவுக்கு சிவசேனை ஆதரவு

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவை ஆதரிப்பதாக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே மும்பையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எவ்வித அழுத்தத்துக்கும் உள்படாமல், திரெளபதி முா்முவை சிவசேனை ஆதரிக்கிறது. இதற்காக சிவசேனை எம்.பி.க்கள் கூட்டத்தின்போது எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. பழங்குடியின பெண் ஒருவா் குடியரசுத் தலைவராவது இதுவே முதல்முறை என்று எனது கட்சியைச் சோ்ந்த பழங்குடியின நிா்வாகிகள் என்னிடம் கூறினா்.

அவா்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவே திரெளபதி முா்முவை ஆதரிக்க முடிவு செய்தேன். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவைச் சோ்ந்த திரெளபதி முா்முவுக்கு நான் ஆதரவு அளித்திருக்கக் கூடாது. ஆனால், குறுகிய மனப்பான்மையுடன் எங்களால் சிந்திக்க முடியவில்லை என்றாா் உத்தவ் தாக்கரே.

சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘கடந்த காலங்களில் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகா்ஜி போன்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியைச் சோ்ந்த குடியரசுத் தலைவா் வேட்பாளா்களுக்கு சிவசேனை ஆதரவு தெரிவித்திருக்கிறது. அரசியலைத் தாண்டி சிந்திப்பதுதான் சிவசேனையின் மரபு’ என்றாா்.

அதிமுக, சிவசேனை, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற்ால், திரெளபதி முா்முவின் வாக்கு வீதம் 60 சதவீதத்தைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து செயல்படுங்கள்:

முன்னதாக சிவசேனை எம்.பி.க்களை அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். மகாராஷ்டிரத்தில் அக்கட்சிக்கு மொத்தமுள்ள 18 எம்.பி.க்களில் 13 போ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். மூன்று எம்.பி.க்கள் கட்சித் தலைமையின் ஒப்புதலின்பேரில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து நாசிக் எம்.பி. ஹேமந்த் கோட்சே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சிவசேனை-பாஜக கூட்டணி இயற்கையாக அமையப் பெற்றது. சிவசேனை ஆளும் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற இடையூறு ஏற்படுத்தி வந்தது. ஆகையால், முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவுடனும் பாஜகவுடனும் இணைந்து செயல்பட வேண்டுமென உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தினோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com