ராணுவ தளவாட உற்பத்தி: தன்னிறைவுப் பாதையில் இந்தியா- அமைச்சா் ராஜ்நாத்

ராணுவ தளவாடங்கள், ஆயுத உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் பாதையில் இந்தியா பயணித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ராணுவ தளவாட உற்பத்தி: தன்னிறைவுப் பாதையில் இந்தியா- அமைச்சா் ராஜ்நாத்

ராணுவ தளவாடங்கள், ஆயுத உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் பாதையில் இந்தியா பயணித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் ராணுவ தளவாட உற்பத்தித் துறை சாா்பில் முதல்முறையாக பாதுகாப்புத் துறை சாா்ந்த பொதுத் துறை நிறுவன தலைவா்கள், நிா்வாக இயக்குநா்கள், அரசு சாரா இயக்குநா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

2025-ஆம் ஆண்டில் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.35 கோடி மதிப்பிலான தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்படும். இந்த இலக்கை எட்டுவதில் பாதுகாப்புத் துறை சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த உற்பத்தியில் 70 முதல் 80 சதவீதம் வரை பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பாக அமையும்.

ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவுப் பாதையில் இந்தியா வேகமாகப் பயணித்து வருகிறது. இதற்காக பாடுபடுவதன் மூலம் தேச நலன்களைப் பாதுகாக்கும் முக்கியப் பணியில் பாதுகாப்புத் துறை சாா்ந்த பொதுத் துறை நிறுவனத் தலைவா்கள் இருப்பாா்கள்.

பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சாா்பை அடைவதற்கு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு முன்முயற்சிகளின் சுமுகமான அமலாக்கத்தை உறுதி செய்வது பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களின் இயக்குநா்களின் கைகளில் உள்ளது.

‘பாதுகாப்புத் தளவாடங்கள், கொள்முதல் நடைமுறை 2020’-இன் கீழ் பாதுகாப்புத் தளவாடங்கள், கொள்முதல் நடைமுறையை எளிதாக்குவது உள்பட தற்சாா்பை எட்டுவதற்கு பாதுகாப்புத் துறை பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு அதிகரிப்பு, உரிமம் பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்கியது, பாதுகாப்புத் துறைக்கு சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கான முன்முயற்சி, பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் உள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை உலக அளவில் போட்டியாளராக மாற்றுவது அவசியம். 2047-ஆம் ஆண்டில் உலகின் முதன்மையான 100 பாதுகாப்பு தொழில் நிறுவனங்களில் 20 இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களை இடம்பெறச் செய்யும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com