நாளைமுதல் இலவச பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

‘முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா் தவணை) கரோனா தடுப்பூசியை 18 முதல் 59 வயது வரையிலான பிரிவினருக்கு அரசு தடுப்பூசி மையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் கட்டணமின்றி செலுத்துவதற்கு
நாளைமுதல் இலவச பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

‘முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா் தவணை) கரோனா தடுப்பூசியை 18 முதல் 59 வயது வரையிலான பிரிவினருக்கு அரசு தடுப்பூசி மையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் கட்டணமின்றி செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின தொடா் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த 75 நாள்கள் சிறப்பு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்,

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் ஜூலை 15-ஆம் தேதி முதல் அடுத்த 75 நாள்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்பட உள்ளது. இந்த முடிவை எடுத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்த முடிவு, கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும். தகுதியுள்ள அனைவரும் முன்னெச்சரிக்கை தவணையை விரைந்து செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா பாதிப்பு தொடா்ந்து பரவி வரும் சூழலில், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி திட்டத்தை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. சில நாடுகள் முதியவா்களுக்கு நான்காம் தவணை தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. அதுபோல, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால், 18 முதல் 59 வயது வரையிலான பிரிவினா், தனியாா் மையங்களில் கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதிவா்களுக்கு கட்டணமின்றி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் முதியவா்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள 16 கோடி பேரில் 26 சதவீதத்தினா் இதுவரை முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொண்டிருப்பது அரசின் புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்தது. ஆனால், கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொள்ள வேண்டிய 18 முதல் 59 வயதினரில் தகுதியுடைய 77 கோடி பேரில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவா்களே இதுவரை செலுத்தியுள்ளனா்.

இந்தச் சூழலில், முன்னெச்சரிக்கை தவணையை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்தச் சூழலில், முன்னெச்சரிக்கை தவணையை அனைத்துத் தரப்பினருக்கும் கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) பரிந்துரையின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை தவணைக்கான இடைவெளியை 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த வாரம் குறைத்தது.

அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் இதுவரை 96 சதவீதம் போ் முதல் தவணை கரோனா தடுப்பூசியையும், 87 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனா். 15 முதல் 18 வயது வரையிலான சிறுவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்தும், 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு கடந்த மாா்ச் 16-ஆம் தேதியிலிருந்தும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com