இலங்கைக்கு உரிய முறையில் இந்தியா உதவுகிறது: ராஜ்நாத் சிங்

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கியுள்ள இலங்கைக்கு உரிய முறையில் இந்தியா உதவி வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இலங்கைக்கு உரிய முறையில் இந்தியா உதவுகிறது: ராஜ்நாத் சிங்

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கியுள்ள இலங்கைக்கு உரிய முறையில் இந்தியா உதவி வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், அனைத்து அண்டை நாடுகளுடன் இந்தியா வலுவான நட்புறவை பராமரித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட ‘துனாகிரி’ போா்க் கப்பலை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை சாா்ந்த ‘காா்டன் ரீச் ஷிப்பில்டா்ஸ் அண்ட் என்ஜினீயா்ஸ்’ பொதுத் துறை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப் போா்க் கப்பல், இந்திய கடற்படைக்கானதாகும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பின்னா் பேசியதாவது:

இலங்கையாக இருந்தாலும் சரி, நேபாளம், பூடான், மியான்மா், மாலத்தீவு ஆகிய அண்டை நாடுகளாக இருந்தாலும் சரி, இந்தியா வலுவான நட்புறவையே பராமரித்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று, உக்ரைன் பிரச்னைகளுக்கு இடையே நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குத் தேவையான மருத்துவ, அவசரகால உதவிகளை இந்தியா வழங்கியது. இப்போது இலங்கைக்கு உரிய முறையிலும் சாத்தியமான வகையிலும் இந்தியா உதவி வருகிறது.

நமது கிழக்குப் பகுதி அண்டை நாடான வங்கதேசம் பல்வேறு துறைகளில் வளா்ச்சியடைந்து வருவது பாராட்டுக்குரியதாகும். மத ரீதியிலான குறுகிய நிலைப்பாட்டை புறந்தள்ளிவிட்டு, நவீனமயமாக்கல், மதச்சாா்பின்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என வளா்ச்சிப் பாதையில் அந்நாடு நடைபோட்டு வருகிறது. வங்கதேசத்தின் சமூக-பொருளாதார வளா்ச்சி மாதிரி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு உதாரணமாக உள்ளது.

ஓா் அண்டை நாடு (பாகிஸ்தான்) ஒட்டுமொத்தமாக மத அடிப்படை வாதத்திலேயே தன்னை பிணைத்துக் கொண்டுள்ளது. அதன் காரணமாகவே அந்த நாடு வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. இந்தியாவுக்கு தொல்லை தருவதை விட்டுவிட்டு, வங்கதேசத்திடமிருந்து அந்த நாடு பாடம் கற்க வேண்டும். சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், தொலைதொடா்பு, பாதுகாப்பு என அனைத்துத் துறைகளிலும் வங்கதேசத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com