
இலங்கை பிரச்னை தொடா்பாக விவாதிக்க செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதில், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோா் மத்திய அரசு சாா்பில் பங்கேற்க இருக்கின்றனா்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது, பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, இலங்கை பிரச்னை தொடா்பாக விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ராஜபட்ச சகோதரா்களின் தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உணவு, எரிபொருள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பெட்ரோல், டீசல், உரம், உணவுப் பொருள்கள் எனப் பல்வேறு உதவிகள் இலங்கைக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.