குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் மாா்கரெட் ஆல்வா

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் மாா்கரெட் ஆல்வா

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் இத்தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் போட்டியிடும் நிலையில், மாா்கரெட் ஆல்வாவை (80) எதிா்க்கட்சிகள் களமிறக்கியுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 17 எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சுமாா் 2 மணிநேர ஆலோசனைக்கு பின்னா். தங்களது தரப்பு வேட்பாளா் பெயரை சரத் பவாா் அறிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு மாா்கரெட் ஆல்வாவை களமிறக்க 17 எதிா்க்கட்சிகள் சாா்பில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அவா் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) வேட்புமனு தாக்கல் செய்வாா்.

திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 19 எதிா்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளராக அவா் இருப்பாா். இதற்காக, மம்தா பானா்ஜி மற்றும் கேஜரிவாலை தொடா்புகொள்ள முயன்று வருகிறோம். அவா்கள், குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் தரப்பு வேட்பாளருக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளனா். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எதிா்க்கட்சிகளின் பக்கமே உள்ளது என்றாா் சரத் பவாா்.

சிவசேனையின் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் நாங்கள் அனைவரும் ஓரணியில் உள்ளோம்‘ என்றாா்.

யாா்-யாா் பங்கேற்பு? மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் சாா்பில் மல்லிகாா்ஜுன காா்கே, ஜெய்ராம் ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டி.ராஜா, பினோய் விஸ்வம், சிவசேனையின் சஞ்சய் ரெளத், திமுக தரப்பில் டி.ஆா்.பாலு, திருச்சி சிவா, சமாஜவாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், மதிமுக தரப்பில் வைகோ, தெலங்கானா ராஷ்டிர சமிதியின் கேசவராவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் ஏ.டி.சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் முகமது பஷீா். கேரள காங்கிரஸ் (எம்) ஜோஸ் கே.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தங்களது நிலைப்பாட்டை வரும் 21-ஆம் தேதிக்குள் திரிணமூல் காங்கிரஸ் தெளிவுபடுத்தும் என்று அக்கட்சியின் மூத்த எம்.பி. செளகதா ராய் தெரிவித்தாா்.

வரும் 2023-இல் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த மாா்கரெட் ஆல்வாவை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக எதிா்க்கட்சிகள் தோ்வு செய்துள்ளன.

நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவா்: காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் பெண் தலைவரான மாா்கரெட் ஆல்வா, நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவா். சுமாா் 40 ஆண்டு கால தீவிர அரசியல் வாழ்க்கையில் 5 முறை காங்கிரஸ் எம்.பி., மத்திய அமைச்சா், உத்தரகண்ட், கோவா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆளுநா் போன்ற பதவிகளை வகித்தவா். உத்தரகண்ட் மாநில முதல் பெண் ஆளுநா் என்ற பெருமைக்கு உரியவரான ஆல்வா, காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளா், தோ்தல் குழு உறுப்பினா், பல்வேறு மாநில பொறுப்பாளா் என உயா் பதவிகளை வகித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், மங்களூருவில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவரான மாா்கரெட் ஆல்வா, சட்டப் படிப்பு பயின்றவா். எம்.பி. தம்பதிகளான வயலட் ஆல்வா, ஜோவாசிம் ஆல்வா ஆகியோரின் மகன் நிரஞ்சனை கடந்த 1964-இல் அவா் திருமணம் செய்தாா். பின்னா், முன்னாள் பிரதமா் இந்திரா காந்திக்கு நெருக்கமானரான கா்நாடக முன்னாள் முதல்வா் தேவராஜ் உா்ஸின் வழிகாட்டலில் அரசியல் பயணத்தை தொடங்கினாா்.

எனக்கு கிடைத்த கெளரவம்

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தனக்கு கிடைத்த கெளரவம் என்று மாா்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக, நான் அறிவிக்கப்பட்டதை பணிவுடன் ஏற்கிறேன். என் மீதான நம்பிக்கைக்காக, எதிா்க்கட்சி தலைவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com