தமிழகத்தின் நியாயத்தை உச்சநீதிமன்றம் உணர்ந்துள்ளது

கர்நாடகத்தின் மேக்கேதாட்டில் அணைகட்டும் திட்ட விவகாரத்தில் தமிழகத்தின் தரப்பில் நியாயம் உள்ளதை உச்சநீதிமன்றம் உணர்ந்துள்ளது.
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

கர்நாடகத்தின் மேக்கேதாட்டில் அணைகட்டும் திட்ட விவகாரத்தில் தமிழகத்தின் தரப்பில் நியாயம் உள்ளதை உச்சநீதிமன்றம் உணர்ந்துள்ளது. அதன்படி நீதிமன்றம் புதன்கிழமை வழங்கியுள்ள உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட நிலையில், தில்லி வந்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகம் தரப்பில் நியாயம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்து உத்தரவு வழங்கியதற்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பதையும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், மேக்கேதாட்டு குறித்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தரவில்லை. உச்சநீதிமன்றத்தையும் கர்நாடகம் அணுகவில்லை.
 மத்திய அரசு தங்கள் பக்கம் இருக்கிறது என்கிற தைரியத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கலாம் எனக் கூறியது. நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். இந்த விவகாரத்தில் அனுமதி வழங்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான். அந்த வகையில் தற்போது மேக்கேதாட்டு விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது எனவும், அடுத்த விசாரணை வரும் வரை இதுகுறித்து ஆலோசனை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த விசாரணையின்போது தமிழக அரசு வாதங்களை முன்வைக்கும்.
 மேலும், உச்சநீதிமன்றமே கூறியுள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். அதேவேளையில், மத்திய நீர்வள ஆணையமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் நியாயப்படி நடக்கவில்லை. மத்திய அரசின் ஏஜெண்ட் போல் செயல்படுகிறது என்பதாலேயே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இரண்டு ஆணையமும் முறையாகச் செயல்பட்டு இருந்தால், நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டியிருக்காது என்றார் துரைமுருகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com