இந்திய காடுகளில் மீண்டும் சிவிங்கிப் புலிகள்- நமீபியாவிலிருந்து அடுத்த மாதம் வருகை

ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த மாதம் 8 சிவிங்கிப் புலிகள் (சீட்டாக்) கொண்டுவரப்படவுள்ளன.
இந்திய காடுகளில் மீண்டும் சிவிங்கிப் புலிகள்- நமீபியாவிலிருந்து அடுத்த மாதம் வருகை

ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த மாதம் 8 சிவிங்கிப் புலிகள் (சீட்டாக்) கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் புதன்கிழமை கையொப்பமிட்டன.

இந்தியாவில் சிவிங்கிப் புலி இனம் முற்றிலும் அழிந்துபோனதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது: நமீபியாவிலிருந்து 4 ஆண் சிவிங்கிப் புலிகளும், 4 பெண் சிவிங்கிப் புலிகளும் அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது. இதேபோல், தென்ஆப்பிரிக்காவில் இருந்தும் சிவிங்கிப் புலிகளை கொண்டுவர அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேச மாநிலம், சியோபூா் மாவட்டத்தில் உள்ள குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் என்றாா் அவா்.

சிவிங்கிப் புலிகள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய பாலூட்டி உயிரினம் இவை. ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை பெருமளவில் வேட்டையாடியதால், சிவிங்கிப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்து போனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் சிவிங்கிப் புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி, உலகிலேயே அதிக சிவிங்கிப் புலிகளை கொண்ட நமீபியாவுடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

உலக அளவில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com