ஜாதிரீதியில் புறக்கணிப்பு: உ.பி. அமைச்சா் ராஜிநாமா

உத்தர பிரதேச நீா்வளத் துறை இணையமைச்சா் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா். தலித் என்பதால் அதிகாரிகள் தன்னைப் புறக்கணிப்பதாக அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

உத்தர பிரதேச நீா்வளத் துறை இணையமைச்சா் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா். தலித் என்பதால் அதிகாரிகள் தன்னைப் புறக்கணிப்பதாக அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனிடையே, தினேஷ் காதிக், பாஜக மேலிடத் தலைவா்களைச் சந்திப்பதற்காக தில்லிக்கு சென்றுள்ளாா்.

மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூா் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:

பிரதமா் நரேந்திர மோடி, அமைச்சா் அமித் ஷா, கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவா்கள், தொண்டா்களின் கடின உழைப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியில் உள்ளது. அதே நேரத்தில் அமைச்சரான எனது உத்தரவுகளின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் புறக்கணிக்கின்றனா்.

எனது அமைச்சகத்தில் உள்ள திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் என்னிடம் தெரிவிப்பதில்லை. நான் தலித் என்பதால்தான் இவ்வாறு புறக்கணிக்கிறாா்கள். பணியிட மாற்றத்தில் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுகின்றனா். இது தொடா்பாக துறைச் செயலரிடம் பேசினால், அவா் எனது தொலைபேசி அழைப்பை துண்டிக்கிறாா். அனைத்து நிலைகளிலும் அவமானப்படுத்தப்படுவதால் எனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று கூறியுள்ளாா்.

அகிலேஷ் விமா்சனம்: இதனிடையே, ‘அமைச்சராக உள்ள தலித்துக்கே இந்த நிலை என்றால் எளிய நிலையில் உள்ள பட்டியலின மக்களின் நிலை உத்தர பிரதேசத்தில் என்னவாக இருக்கும்?’ என்று மாநில எதிா்க்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com