சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்: நாட்டுமக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விடைபெறும் உரை

நாம் நமது சுற்றுச்சூழலை, நமது நிலத்தை, காற்றை, நீரை, நமது குழந்தைகளுக்காகவாவது பாதுகாக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்: நாட்டுமக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விடைபெறும் உரை

நாம் நமது சுற்றுச்சூழலை, நமது நிலத்தை, காற்றை, நீரை, நமது குழந்தைகளுக்காகவாவது பாதுகாக்க வேண்டும்.  நமது அன்றாட வாழ்க்கையில், வாடிக்கையான தேர்வுகளில், நமது மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய விடைபெறும் உரையில் தெரிவித்தார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறும் ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:
வணக்கம்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாக என்னை இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள். என் பணிக்காலம் முடிவடைந்த பிறகு நான் விடைபெறும் வேளையில் உங்கள் அனைவரோடும் நான் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி விலகும் நாளை முன்னிட்டு, உங்களுக்கும் உங்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த நான், இன்று நாட்டுமக்களாகிய உங்கள் அனைவருக்கும் முன் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். 

எனது பதவிக் காலத்தில் மருத்துவர்கள்-செவிலியர்கள், விஞ்ஞானிகள்-பொறியாளர்கள், நாட்டின் நீதிவழங்கல் முறைக்குப் பங்களிப்பு அளிக்கும் நீதிபதிகள்-வழக்குரைஞர்கள், நிர்வாகத்தைச் சீராக இயக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள், வளர்ச்சியோடு அனைத்து சமூகப் பிரிவுகளையும்  இணைக்கும் நமது சமூக சேவகர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும், ஆசிகளும் பெற்றேன்.

நமது முப்படைகள், துணை இராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த தைரியமான வீரர்களை சந்திக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புகள், குறிப்பாக என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அவர்களிடம் இருக்கும் தேசபக்தி உணர்வு ஆச்சரியமானதாக இருப்பதோடு, கருத்தூக்கம் அளிக்கவும் வல்லது. அயல்நாடுகளுக்கு நான் சென்ற போது, அங்கே வாழும் இந்திய வம்சாவளி உறுப்பினர்களோடு நான் பேசிய போதெல்லாம் அவர்களுக்கு தாய்நாட்டின் மீது இருந்த அன்பும் அக்கறையும் உள்ளத்தைத் தொடும் விதமாக இருந்தன. தேசிய விருதுகளை அளிக்கும் வேளையில், சில அபூர்வமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.  தங்களுடைய சக இந்தியர்களுக்கு மேம்பட்ட ஒரு  வருங்காலத்தை உருவாக்குவதில் அவர்கள் விடாமுயற்சியோடும், அர்ப்பணிப்போடும் இருக்கிறார்கள்.

நாடு என்பது அதன் குடிமக்களால் ஆனது என்ற நம்பிக்கையை இவை அனைத்தும் மீளுறுதிப்படுத்துகின்றன; நீங்கள் ஒவ்வொருவரும் இந்தியாவை மேலும் மேலும் மேம்பட்ட நாடாக ஆக்கும் முனைப்போடு இருக்கையில், தேசத்தின் மகத்தான எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது.

நாட்டை கட்டமைப்பது குடிமக்களே. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

தேசம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. அடுத்த மாதம் நமது நாடு 75 ஆவது சுதந்திர நாள் விழாவை கொண்டாடவுள்ளோம். நாம் அமிர்த காலத்திற்குள் நுழைவோம், 100 ஆண்டுகளை நோக்கி நாம் நகர உள்ளோம். ஆண்டுவிழாக்கள் எல்லாம் நமது குடியரசின் பயணத்தின் மைல்கற்கள். தனது வல்லமையைத் தெரிந்து, உலகிற்குத் தனது சிறந்த பங்களிப்பை ஆற்றக்கூடிய பயணம். பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

ஜனநாயகத்தின் தூண்கள் இணைக்கப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால் உருவானது நமது இந்தியா. வேற்றுமையைத் தாண்டி நாம் உயர வேண்டும்.

குடியரசுத் தலைவராக இருந்தபோது எனது சொந்த கிராமத்திற்குச் சென்று நான் படித்த பள்ளியில் உள்ள வயதான எனது ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு நல்லாசிகளைப் பெற்ற கணங்கள் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும்.

1915ஆம் ஆண்டு காந்தியடிகள் தாய்நாடு திரும்பிய போது, தேசிய உணர்வு வேகம் பெற்றுக் கொண்டிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தின் சில தசாப்தங்களுக்கு உள்ளாகவே, அசாதாரணமான சிந்தனாசக்தி படைத்த தலைவர்கள் பலர், வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருந்தது ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே நான் உறுதியாக கருதி வந்திருக்கிறேன். 

இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நமது கலாச்சார வேர்களை நாம் கண்டுபிடிக்க, ஒரு நவீனகால ரிஷியைப் போல உதவியவர் என்றால் அது குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் ஆவார்.  அதே போல, பல முன்னேறிய நாடுகளிலும் கூட கேள்விப்பட்டிராத சமத்துவத்தின் தரப்பில், மும்முரமாக வாதிட்டு வந்தார் பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர். திலகர் முதல் கோகலே, பகத் சிங், நேதாஜி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்யா என, மனிதகுல வரலாற்றிலே, ஒரு பொது நோக்கத்திற்காக இத்தனை மகத்தான மனிதர்கள் ஒருங்கிணைந்ததைக் காண முடியாது.

நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. எனது பதவிக்காலத்தின் ஐந்தாண்டுகளில், என் திறமைக்கேற்ப சிறப்பான வகையில் என் பொறுப்புக்களை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.  

டாக்டர். ராஜேந்திர பிரசாத், டாக்டர். ச. ராதாகிருஷ்ணன், டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் போன்ற மகத்தான ஆளுமைகளுக்குப் பின்னவராக நான் வந்திருக்கிறேன் என்பது குறித்து நான் விழிப்போடு இருந்திருக்கிறேன்.  

குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் நுழைந்த போது, எனக்கு முன்பிருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள், என்னுடைய கடமைகள் குறித்து தனது அறிவார்ந்த ஆலோசனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்.  இருந்த போதிலும், எனக்கு ஐயப்பாடு ஏற்பட்ட போதெல்லாம், நான் காந்தியடிகள், அவரது பிரபலமான மந்திரச் சொற்கள் மீது தான் என் சிந்தையைச் செலுத்துவேன். மிகவும் அடித்தட்டிலே இருக்கும் பரம ஏழையின் முகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற அவரது அறிவுரையை மனதில் தாங்கி, நான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை அவருக்கு ஏதாவது பயனாக இருக்குமா என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.  

நான் மீண்டுமொரு முறை கூறுகிறேன், காந்தியடிகளின் வாழ்க்கையையும், கற்பித்தல்களையும், ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களுக்காவது நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று உங்களிடத்திலே வலியுறுத்துகிறேன்.
 
நமது மூதாதையர்களும், நமது நவீனகால தேசத்தின் நிறுவனர்களும், தங்களுடைய கடும் உழைப்பு, சேவை மனப்பான்மை வாயிலாக, சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகியவற்றின் பொருளை சிறப்பாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.  நாம் அவர்களுடைய காலடித்தடங்களில் தொடர்ந்து நடந்தால் மட்டுமே போதுமானது.
 
வாழ்க்கையை வாழ்வதில் உள்ள மகிழ்வைக் கண்டுபிடிக்க உதவுவதே முக்கியமான இலக்கு என்று நான் நம்புகிறேன்.  இதன் பொருட்டு, முதன்மையாக, அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.  ஆதாரங்களின் தட்டுப்பாடுகள் என்ற நாட்களைத் தாண்டி நாம் நீண்ட தொலைவு பயணித்து விட்டோம்.  மேம்பட்ட வீட்டுவசதி, குடிநீர்-மின்சாரம் ஆகியவற்றை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொண்டு சேர்ப்பது என்ற இலக்கு நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.   பாரபட்சமறியா நல்லாளுகை, வேகமான வளர்ச்சி ஆகியவை வாயிலாகவே இந்த மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது.
 
நமது அன்றாட வாழ்க்கையிலும், வழக்கமான தேர்வுகளிலும், இயற்கையையும் மற்ற எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையானது, இளம் இந்தியர்களைத் தங்களுடைய பாரம்பரியத்தோடு இணைப்பதோடு, 21ஆம் நூற்றாண்டில் அவர்கள் உறுதியாகக் கால்பதிக்க பெரிய வகையில் உதவி புரியும் என்று நான் நம்புகிறேன்.  

அவர்களின் நாளைய வளமான வாழ்விற்கு, ஆரோக்கியப் பராமரிப்பு மிக அவசியம். பொதுமக்களுக்குப் பயனாகும் உடல்நலக் கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, பெருந்தொற்று அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.  இந்தப் பணிக்கு அரசாங்கம் உச்சபட்ச முதன்மை அளித்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  

கல்வியும், ஆரோக்கியமும் கவனித்துக் கொள்ளப்பட்டால், தங்களுடைய வாழ்க்கைக்கான சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்க, பொருளாதார சீர்த்திருத்தங்கள் குடிமக்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

இயற்கை அன்னை ஆழ்துயரில் இருக்கிறாள், நமது பூமியின் எதிர்காலத்தையே கூட பருவநிலைச் சங்கடம் ஆபத்துக்குள்ளாக்கலாம்.  நாம் நமது சுற்றுச்சூழலை, நமது நிலத்தை, காற்றை, நீரை, நமது குழந்தைகளுக்காகவாவது பாதுகாக்க வேண்டும்.  நமது அன்றாட வாழ்க்கையில், வாடிக்கையான தேர்வுகளில், நமது மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.  தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில், என் சக குடிமக்களுக்கு ஆலோசனை ஒன்று நான் வழங்க வேண்டுமென்றால் அது இதுவாகவே இருக்கும்.

21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு நம் நாடு தயாராகி வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாரத அன்னைக்கு என் வணக்கங்கள். உங்கள் அனைவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள் என்றார் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com