திருமணமாகாத தாயின் பெயரை மட்டும் சான்றிதழில் குறிப்பிட நீதிமன்றம் அனுமதி
திருமணமாகாத தாயின் பெயரை மட்டும் சான்றிதழில் குறிப்பிட நீதிமன்றம் அனுமதி

திருமணமாகாத தாயின் பெயரை மட்டும் சான்றிதழில் குறிப்பிட நீதிமன்றம் அனுமதி

திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகள், தங்களது சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொச்சி: திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகள், தங்களது சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திருமணமாகாத தாய் மற்றும் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இந்த சமூகத்தில் மரியாதை, தனிநபர் உரிமை, சுதந்திரத்தோடு வாழ வகை செய்யும் வகையில், பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் கடந்த 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், திருமணமாகாத பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையும் இந்நாட்டு குடிமகன்தான். எனவே, அவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் எந்த ஒரு உரிமையையும் நிராகரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

திருமணமாகாத பெண்களுக்கு மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களுக்குப் பிறகும் குழந்தைகளுக்கும் இந்த நாட்டில் சுதந்திரம், மரியாதை, தனிநபர் உரிமையோடு வாழ முழு தகுதி உண்டு. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் குறுக்கிட முடியாது, அவ்வாறு நடந்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் என்று தீர்ப்பில் தெரிவித்தார்.

திருமணமாகாத ஒரு பெண்ணுக்குப் பிறந்த மகனின் மூன்று ஆவணங்களில் தந்தை என்ற இடத்தில் மூன்று வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், அந்த நபரின் பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற இடத்தில் இருக்கும் பெயரை நீக்குமாறும், தாயின் பெயரை சேர்த்து பெற்றவரில் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று விண்ணப்பித்தால் அதனை நிறைவேற்றிக் கொடுக்குமாறு பிறப்பு / இறப்பு பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் ஒரு நபர், அவருக்கு மட்டும் மகன்/மகள் அல்ல, இந்த மிகச் சிறந்த இந்திய நாட்டின் மகன் / மகளும் ஆவார் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுளள்து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com