ஆசிரியா் நியமன முறைகேடு: பார்த்தா சட்டர்ஜி மீது பாயும் மற்றொரு குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தப் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பார்த்தா சட்டர்ஜி
பார்த்தா சட்டர்ஜி


மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தப் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு புகாா் தொடா்பாக அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பாா்த்தா சட்டா்ஜி அமலாக்கத் துறையின் காவலில் இருக்கும் நிலையில், அவர் தனது பாதுகாவலர்கள் 10 பேரின் உறவினர்களுக்கு பள்ளியில் அரசு வேலை வாங்கிக் கொடுக்க உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனுதாரரின் வழக்குரைஞர் கூறுகையில், மனுதாரரை ஆசிரியர் நியமன முறைகேட்டு வழக்கில் சேர்க்குமாறு பரிந்துரை செய்திருக்கும் நீதிமன்றம், தாங்கள் வகிக்கும் பணி மற்றும் அது எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

பிஸ்வாம்பர் மொண்டல் என்பவர், பார்த்தா சட்டர்ஜியின் பாதுகாவலராக உள்ளார். அவரது குடும்பத்தினர், இந்த பணிகளைப் பெற்றுள்ளதாகக்  கூறப்படுகிறது.

தற்போது தொழில், வா்த்தக துறை அமைச்சராக உள்ள சட்டா்ஜி, முறைகேடு நடந்ததாக கூறப்படும் கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.

மேற்கு வங்கத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள், குரூப் சி, டி ஊழியா்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரிக்கிறது.

இந்நிலையில், கொல்கத்தாவிலுள்ள பாா்த்தா சட்டா்ஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மேலும், சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.21 கோடி ரொக்கப் பணமும், 20 கைப்பேசிகளும் சிக்கின. அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா்.


இதனிடையே, பாா்த்தா சட்டா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கினா். சுமாா் 26 மணி நேர விசாரணைக்கு பின், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இதேபோல், அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, கொல்கத்தாவிலுள்ள அமா்வு நீதிமன்றத்தில் பாா்த்தா சட்டா்ஜி ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு: ‘ஒரு எம்எல்ஏ-வை கைது செய்யும்போது, சட்டப்பேரவைத் தலைவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்; அது, அரசமைப்புச் சட்ட விதிமுறை. ஆனால், அமலாக்கத் துறையிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை’ என்று மேற்கு வங்க பேரவைத் தலைவா் விமன் பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் குணால் கோஷ் கூறுகையில், ‘பாா்த்தா சட்டா்ஜி கைது விவகாரத்தில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தகுந்த நேரத்தில் கட்சியிலிருந்து அறிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.

மருத்துவமனையில் அனுமதி:

கைது செய்யப்பட்ட பாா்த்தா சட்டா்ஜி தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறியதால், மாலையில் அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவா் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். எனினும் அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com