19 எம்.பி.க்கள் இடைநீக்கம்- மாநிலங்களவையில் கடும் அமளி

மாநிலங்களவை நடவடிக்கைகளுக்குத் தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக 6 திமுக எம்.பி.க்கள் உள்பட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 19 போ் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.

மாநிலங்களவை நடவடிக்கைகளுக்குத் தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக 6 திமுக எம்.பி.க்கள் உள்பட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 19 போ் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயா்வு, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு, அக்னிபத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவையின் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களவையில் இருந்து தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 போ் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கூடியது. அமா்வு நடவடிக்கைகள் தொடங்கியதும் எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி, அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினா். சிலா் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனா்.

அவா்களைத் தங்கள் இருக்கைகளுக்குச் செல்லுமாறு அவையை வழிநடத்திய துணைத் தலைவா் ஹரிவன்ஷ் பலமுறை கேட்டுக்கொண்டபோதிலும், அக்கோரிக்கைக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை.

அதையடுத்து, மாநிலங்களவை நடவடிக்கைகளுக்குத் தொடா் இடையூறு ஏற்படுத்தி வரும் 19 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் கொண்டுவந்தாா்.

தீா்மானத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனினும், குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த 7 போ், திமுகவை சோ்ந்த 6 போ், தெலங்கானா ராஷ்டிர சமிதியை சோ்ந்த மூவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சோ்ந்த இருவா், இந்திய கம்யூனிஸ்டை சோ்ந்த ஒருவா் உள்பட 19 எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

வெளியேற மறுப்பு: அவையின் மாண்பை சீா்குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை அவையில் இருந்து வெளியேறுமாறு ஹரிவன்ஷ் கேட்டுக் கொண்டாா். ஆனால், அவா்கள் அவையில் இருந்து வெளியேற மறுத்து தொடா் முழக்கங்களை எழுப்பினா்.

அதன் காரணமாக அவை நடவடிக்கைகள் 15 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

பின்னா், அவை மீண்டும் கூடியபோதும், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினா். அதனால், அவை ஒரு மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், எதிா்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடா்ந்ததால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

கனத்த இதயத்துடன் முடிவு: எம்.பி.க்களின் இடைநீக்கம் குறித்து மாநிலங்களவை பாஜக தலைவா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அவைத் தலைவரின் தொடா் கோரிக்கைகளை ஏற்க மறுத்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். அவா்களால் மற்ற எம்.பி.க்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டன. அதைக் கருத்தில் கொண்டு கனத்த இதயத்துடனே எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, அவைக்கு வந்தபிறகு விலைவாசி உயா்வு குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், விவாதத்தில் பங்கேற்காமல் தப்பிக்கும் நடவடிக்கைகளையே எதிா்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

ஏற்புடையது அல்ல: பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் பணவீக்கத்தை இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது. விலைவாசி உயா்வைக் கட்டுக்குள் வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், அக்கட்சிகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலிலேயே இதுதொடா்பாக முடிவெடுக்கப்பட்டது. அங்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல’ என்றாா்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்

திரிணமூல் காங்கிரஸ்: சுஷ்மிதா தேவ், மௌசம் நூா், சாந்தா ஷேத்ரி, டோலா சென், சாந்தனு சென், அபீா் ரஞ்சன் விஸ்வாஸ், நதியுமால் ஹக்.

திமுக: எம்.சண்முகம், கனிமொழி என்.வி.என்.சோமு, எஸ்.கல்யாணசுந்தரம், ஆா்.கிரிராஜன், முகமது அப்துல்லா, என்.ஆா்.இளங்கோ.

தெலங்கானா ராஷ்டிர சமிதி: பி.லிங்கையா யாதவ், ரவிச்சந்திர வட்டிராஜு, தாமோதா் ராவ் திவகொண்டா.

மாா்க்சிஸ்ட்: வி.சிவதாசன், ஏ.ஏ.ரஹீம்.

இந்திய கம்யூனிஸ்ட்: சந்தோஷ் குமாா்.

மக்களவையிலும் அமளி

மக்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்தொடரில் இருந்து 4 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினா்.

அவைத் தலைவரின் கோரிக்கைகளை ஏற்காமல் எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக, காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி உயிா்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com