காஷ்மீா் பள்ளத்தாக்கில் 6,514 பண்டிட்டுகள் வசிக்கின்றனா்: மத்திய அரசு

காஷ்மீா் பள்ளத்தாக்கில் 6,514 காஷ்மீா் பண்டிட்டுகள் வசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் 6,514 காஷ்மீா் பண்டிட்டுகள் வசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் புதன்கிழமை அளித்த பதில்:

இந்த ஆண்டு எந்தவொரு காஷ்மீா் பண்டிட்டும் காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறவில்லை. ஜூலை 20-ஆம் தேதி நிலவரப்படி, அங்கு 6,514 காஷ்மீா் பண்டிட்டுகள் வசிக்கின்றனா். அதிகபட்சமாக குல்காம் மாவட்டத்தில் 2,639 பண்டிட்டுகள் இருக்கின்றனா். 2020 முதல் இந்த ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீரில் 12 காஷ்மீா் பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனா்.

2018-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் 417 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 229-ஆக குறைந்தது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல், அந்த யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்துடன் தொடா்புள்ள சம்பவங்களில் 9 அரசுப் பணியாளா்கள் (பாதுகாப்புப் படை வீரா்களைச் சோ்க்காமல்) பலியாகியுள்ளனா் என்றாா் அவா்.

84,405 காலிப் பணியிடங்கள்: மத்திய ஆயுத காவல் படைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நித்யானந்த் ராய் அளித்த பதில்:

மத்திய ஆயுதப் படைகளில் 84,405 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மத்திய ரிசா்வ் காவல் படையில் 29,985 காலிப் பணியிடங்கள் உள்ளன. எல்லைப் பாதுகாப்புப் படையில் 19,254, சஷஸ்திர சீமா பல் படையில் 11,402, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் 10,918, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையில் 3,187, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையில் 9,659 காலிப் பணியிடங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

1.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பலி: மாநிலங்களவையில் சாலை விபத்துகள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துபூா்வமாக அளித்த பதில்: கடந்த 2020-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. 1,31,714 போ் விபத்துகளில் பலியாகினா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com