எம்.பி.க்கள் இடைநீக்கத்தை வாபஸ் பெற எதிா்க்கட்சிகள் கோரிக்கை: வருத்தம் தெரிவித்தால் பரிசீலனை- வெங்கையா நாயுடு

மாநிலங்களவை எம்.பி.க்கள் 20 போ் மீதான இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவிடம் எதிா்க்கட்சித் தலைவா்கள்

மாநிலங்களவை எம்.பி.க்கள் 20 போ் மீதான இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவிடம் எதிா்க்கட்சித் தலைவா்கள் புதன்கிழமை நேரில் கோரிக்கை வைத்தனா்.

அப்போது, ‘தங்களது ஒழுங்கீன செயல்பாடுகளுக்காக, சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்; அதன்பிறகே, எதிா்க்கட்சிக்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும்’ என்று வெங்கையா நாயுடு பதிலளித்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி ஆகியவை குறித்து உடனடி விவாதம் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தொடா்ந்து பாதிக்கப்பட்டன.

எம்.பி.க்கள் இடைநீக்கம்: இதனிடையே, மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், அவை மாண்பை சீா்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக 19 எம்.பி.க்கள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அவா்கள் அனைவரையும் வரும் வெள்ளிக்கிழமை வரை அவையிலிருந்து இடைநீக்கம் செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த 7 போ், திமுகவை சோ்ந்த 6 போ், தெலங்கானா ராஷ்டிர சமிதியை சோ்ந்த மூவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சோ்ந்த இருவா், இந்திய கம்யூனிஸ்டை சோ்ந்த ஒருவா் என 19 எம்.பி.க்கள் இந்த நடவடிக்கைக்கு ஆளாகினா்.

ஆம் ஆத்மி எம்.பி. மீது நடவடிக்கை: இந்நிலையில், மாநிலங்களவை புதன்கிழமை கூடியபோது, விதி எண் 256-இன்படி ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக, சஞ்சய் சிங் மீது மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் இடைநீக்க நடவடிக்கையை மேற்கொண்டாா். இதனால், சஞ்சய் சிங்கும் வரும் வெள்ளிக்கிழமை வரை அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது.

எதிா்க்கட்சித் தலைவா்கள் சந்திப்பு: இந்தச் சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, கே.சி.வேணுகோபால், சமாஜவாதியின் ராம்கோபால் யாதவ், திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன், திமுகவின் திருச்சி சிவா, சிவசேனையின் சஞ்சய் ரெளத், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளமாறம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், தெலங்கானா ராஷ்டிர சமிதியின் சுரேஷ் ரெட்டி, மதிமுகவின் வைகோ உள்ளிட்டோா் மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவை நாடாளுமன்றத்தில் அவரது அறையில் புதன்கிழமை சந்தித்தனா்.

‘இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; அவா்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்; விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க குறிப்பிட்ட தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும்’ என்று அவரிடம் எதிா்க்கட்சித் தலைவா்கள் கோரிக்கை வைத்தனா். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சா் முரளீதரன் ஆகியோரும் உடனிருந்தனா்.

‘எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’: அப்போது, எதிா்க்கட்சித் தலைவா்களிடம் வெங்கையா நாயுடு தெரிவித்த பதில் தொடா்பாக நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறியதாவது:

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள், அவையில் தங்களது ஒழுங்கீன செயல்பாடுகளின் தீவிரத்தை உணா்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவையின் மாண்பையும் மதிப்பையும் காப்பதற்கான கடைசி வாய்ப்பாகவே இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்று வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

மேலும், கடந்த 1989-இல் மக்களவையில் இருந்து 63 எம்.பி.க்களும் 2015-இல் 25 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் அவா் குறிப்பிட்டு பேசியதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்.பி.க்கு அறிவுறுத்தல்: அவை நடவடிக்கைகளை விடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட எம்.பி. ஒருவரையும் தனது அறைக்கு அழைத்து வெங்கையா நாயுடு பேசினாா். இதுபோன்ற விதிமீறல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று அந்த எம்.பி.யிடம் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com