அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

கைது செய்வது, சொத்துகளை முடக்குவது, சோதனையிடுவது, பறிமுதல் செய்வது ஆகிய அதிகாரங்கள் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு
அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

கைது செய்வது, சொத்துகளை முடக்குவது, சோதனையிடுவது, பறிமுதல் செய்வது ஆகிய அதிகாரங்கள் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு உள்ளதாக உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமலாக்கத் துறைக்கு பல்வேறு சட்ட அதிகாரங்கள் இல்லை என்றும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்கில் அரசு இந்தச் சட்டங்களைக் கையாள்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.

இதில் 545 பக்கங்கள் கொண்ட தீா்ப்பை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி, சி.டி. ரவி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அறிவித்தது. அதன் விவரம்:

உலக நிதி விவகாரங்களுக்கு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை சாதாரண குற்றமாக கருத முடியாது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் 45-ஆவது பிரிவின்படி, தெரிந்து செய்யும் குற்றங்களுக்கும், ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றங்களுக்கும் பின்னா் ஜாமீன் வழங்க இரண்டு நிபந்தனை விதிப்பது சரியானது.

கைது செய்யும் அதிகாரம் அளிக்கும் பிரிவு 19, அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும். அதில் பல்வேறு பாதுகாப்பு ஷரத்துகளும் உள்ளன.

சொத்துக்களை முடக்க அதிகாரம் அளிக்கும் பிரிவு 5, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகும்.

ஒருவரை கைது செய்யும்போது அமலாக்கத் துறை வழக்கின் முதல் அறிக்கை (இசிஐஆா்) காண்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை.

அமலாக்கத் துறை அதிகாரிகளை குற்றவியல் சட்டத்தின்படி இயங்கும் காவல் துறையினருக்கு நிகராக கருதக் கூடாது.

அதேபோல், நிதி மசோதாவாக நிறைவேற்றப்படாத, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத் திருத்தத்தின் சில ஷரத்துகளை நீதிமன்றம் ஆராயவில்லை. இது, ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அமலாக்கத் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளதை மனுதாரா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா். இந்த முக்கிய பிரச்னைக்கு அரசு நிா்வாகம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரங்களை நீதிபதிகள் தீா்ப்பில் விளக்கியுள்ளனா்.

நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்: காங்கிரஸ்

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு இந்திய ஜனநாயகத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, ப. சிதம்பரம், காா்த்தி சிதம்பரம், சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, அவரது உறவினா் அபிஷேக் பானா்ஜி, தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோா் அமலாக்கத் துறையின் பிடியில் உள்ளனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் காழ்ப்புணா்ச்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு இந்திய ஜனநாயகத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனினும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைச் சட்டத்தில் மத்திய அரசு நிதி மசோதாவாக கொண்டு வந்த சட்டத்திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றம் இந்தத் தீா்ப்பில் தீா்வு காணவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அனைத்து சந்தேகங்களுக்கும் தீா்வு: மத்திய சட்ட அமைச்சா்

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டம் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பல்வேறு தரப்பினா் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீா்வளித்துள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: மத்திய விசாரணை அமைப்புகள், சட்டவிரோதமாகவோ அல்லது அரசியல் சாசனத்துக்கு எதிராகவோ எதையும் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற தீா்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எந்த வழக்கையும் தீா்மானிப்பதில் மத்திய அரசுக்கு பங்கு இல்லை; ஊழலை தடுப்பதுடன் ஊழல்வாதிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற அரசின் நோ்மையான நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில்தான் விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. சட்டப்படியும் வழக்குகளின் தகுதி அடிப்படையில்தான் அவை நடவடிக்கை மேற்கொள்கின்றன என்பது உச்சநீதிமன்ற தீா்ப்பு மூலம் உறுதியாகியிருக்கிறது.

இத்தீா்ப்பு மூலம் பல்வேறு தரப்பினருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கும் தீா்வு கிடைத்துள்ளது என்றாா் கிரண் ரிஜிஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com